/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய கைத்தறி தின விழாவில் நெசவாளர்களுக்கு முதல்வர் பரிசு
/
தேசிய கைத்தறி தின விழாவில் நெசவாளர்களுக்கு முதல்வர் பரிசு
தேசிய கைத்தறி தின விழாவில் நெசவாளர்களுக்கு முதல்வர் பரிசு
தேசிய கைத்தறி தின விழாவில் நெசவாளர்களுக்கு முதல்வர் பரிசு
ADDED : ஆக 08, 2025 02:17 AM

புதுச்சேரி: தேசிய கைத்தறி தினத்தையொட்டி, புதுச்சேரி கூட்டுறவு துறை கைத்தறி பிரிவு மற்றும் காஞ்சிபுரம் நெசவாளர் சேவை மையம் இணைந்து 11வது தேசிய கைத்தறி தின விழாவை கொண்டாடின.
விழாவிற்கு முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, பிரதம நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நெசவு செய்யும் நெசவாளர்களின் கூலியில் தற்போது பெறும் அகவிலைபடியில் கூடுதலாக 20 சதவீதத்தை உயர்த்தி வழங்கினார். இதில், தட்டாஞ்சாவடி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் மூலம் நெசவாளர்கள் உற்பத்தி செய்த புதிய வடிவமைப்போடு கூடிய துண்டு ரகத்தை முதல்வர் ரங்கசாமி அறிமுகம் செய்தார்.
கடந்தாண்டு, பிரதம நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் அதிகளவு நெசவு செய்து கூலி பெற்ற முதல் மூன்று நெசவாளர்களுக்கு ரொக்க பரிசு, முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2,000 வழங்கப்படுகிறது. அதன்படி, 18 நெசவாளர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
தேசிய கைத்தறி வளர்ச்சி திட்டத்தின் கீழ், ஹத்கர்கா சமவர்தன் சஹாயதா திட்டம் மூலம் விண்ணப்பம் பெற்று 6 பிரதம கைத்தறி நெசவாளர்கள் சங்கங்களுக்கு ரூ.30 லட்சம் மதிப்புள்ள தறி உபகரணங்கள் வழங்கப்பட்டது. மேலும், 36 நெசவாளர்களுக்கு டேபிள் பேன் வழங்கப்பட்டன.
சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், அரசு கூட்டுறவு செயலாளர் ஜெயந்தா குமார் ரே, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யஸ்வந்தையா, காஞ்சிபுரம் நெசவாளர்கள் சேவை மைய துணை இயக்குநர் வாசு, இணை பதிவாளர் சாரங்கபாணி, பாண்டெக்ஸ் துணை பதிவாளர் (நுகர்வோர்) குமரன், மேலாண் இயக்குநர் ஷியாம் சுந்தர் உட்பட பலர் பங்கேற்றனர்.