/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க முதல்வர்... உத்தரவு; கன மழையை எதிர்கொள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை
/
அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க முதல்வர்... உத்தரவு; கன மழையை எதிர்கொள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை
அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க முதல்வர்... உத்தரவு; கன மழையை எதிர்கொள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை
அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க முதல்வர்... உத்தரவு; கன மழையை எதிர்கொள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை
ADDED : நவ 27, 2024 11:21 PM

புதுச்சேரி: கன மழையை எதிர்கொள்ள புதுச்சேரியில் அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் அடுத்த ஓரிரு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை, புயலாக மாறுவதால், அதற்கு பெங்கல் என பெயரிடப்பட்டுள்ளது.
தமிழகத்தை நோக்கி புயல் நகர்ந்து வருவதால், இன்று 28ம் தேதி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார் ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சியில் கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது, சூறைக்காற்றுடன் கன மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுச்சேரியில் கனமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, தொடர்புடைய அனைத்துத் துறைத் தலைவர்களுடன் முதல்வர் ரங்கசாமி நேற்று சட்டசபையில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
கூட்டத்தில், சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், ரமேஷ் எம்.எல்.ஏ., கலெக்டர் குலோத்துங்கன், சீனியர் எஸ்.பி., கலைவாணன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், உள்ளாட்சித்துறை இயக்குநர் சக்திவேல், புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கன மழையை எதிர்கொள்ள புதுச்சேரியில் அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார்.
பின்னர், முதல்வர் கூறியதாவது;
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று பரங்கிப்பேட்டை மற்றும் சென்னைக்கு இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக புதுச்சேரியில் 7.6 செ.மீ. மழையும் காரைக்காலில் 9.6 செ.மீ. மழையும் இதுவரையில் பதிவாகியுள்ளது.
புதுச்சேரியில் புயல் கரையைக் கடக்கும் என்ற நிலை ஏற்பட்டால் அரசு எவ்வித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. புயல் மற்றும் கனமழையை எதிர்கொள்ள போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2 தேசிய பேரிடர் மீட்பு படை புதுச்சேரிக்கு வந்துள்ளது. தேவையான நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மழைநீர் தேங்காத வகையில் 60 மோட்டார் பம்புகள் பொருத்தப்பட்டு தேவையான நடவடிக்கை எடுத்துள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் அவசர கால செயல்பாட்டு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. சுற்றுலாப் பயணிகள் கடலுக்கு செல்லாத வகையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு, அறிவுறுத்தி வருகின்றனர்.
தேவைப்பட்டால் பாதிக்கப்படும் மக்களுக்கு உணவு வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடிநீர் சரியான முறையில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் பாதுகாப்பாக இருப்பதற்கான நடவடிக்கையை அரசு முழுமையாக எடுத்துள்ளது என்று கூறினார்.