/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரேஷன் கடைகள் இல்லாத பகுதிகளில் வேன் மூலம் இலவச அரிசி வழங்க ஏற்பாடு முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
/
ரேஷன் கடைகள் இல்லாத பகுதிகளில் வேன் மூலம் இலவச அரிசி வழங்க ஏற்பாடு முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ரேஷன் கடைகள் இல்லாத பகுதிகளில் வேன் மூலம் இலவச அரிசி வழங்க ஏற்பாடு முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ரேஷன் கடைகள் இல்லாத பகுதிகளில் வேன் மூலம் இலவச அரிசி வழங்க ஏற்பாடு முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ADDED : மார் 20, 2025 04:41 AM
புதுச்சேரி: சட்டசபையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:
ரிச்சர்டு(பா.ஜ): குடிமைப்பொருள் வழங்கல்துறை மூலம் மக்களுக்கு மாதந்தோறும் அரிசி வழங்கப்படுகிறது. பல பகுதிகளில் ரேஷன்கடைகளே இல்லை. சில இடங்களில் தற்காலிக ரேஷன் கடைகள் செயல்படுகின்றன.
நகர பகுதியில் உள்ள கடைகளுக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் தான் வாடகை நிர்ணயித்துள்ளனர். முன்பணம் வழங்கவும் அரசு தயாராக இல்லாததால், வாடகைக்கு இடம் தர யாரும் முன்வருவதில்லை. வாடகை தொகையை உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
அமைச்சர் திருமுருகன்: சில பகுதிகளில் ரேஷன் கடைகள் இல்லை என்பது உண்மை தான். வணிக வாடகை தொகை உயர்ந்துள்ளது. இதனால், அருகில் உள்ள கடையோடு இணைத்து இயக்க முயற்சித்து வருகிறோம்.
சமுதாய கூடம், கோவில் வளாகத்தில் ரேஷன்கடை அமைத்துள்ளோம். வாடகை சிரமங்களை தீர்க்கவும், அனைத்து இடங்களிலும் ரேஷன் கடைகளை திறக்கவும் சங்கத்திற்கு கையாளும் கட்டணம், சில்லரை கமிஷனை கிலோவுக்கு 90 பைசாவிலிருந்து ரூ.1.80 ஆக உயர்த்தியுள்ளோம்.
ஏப்ரல் முதல் மானியம் உயர்த்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் சம்பளம் உயர்வு இரட்டிப்பாக கிடைக்கும். ரேஷன் கடை ஊழியர்களின் அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும்.
ரிச்சர்டு: கோவில், சமுதாய நலக்கூடத்தில் செயல்படுவதால் பல பிரச்னைகள் உருவாகிறது. ரேஷன்கடை இருப்பதால் சமுதாய கூடத்தை ஏழை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதை கருத்தில்கொண்டு அனைத்து பகுதியிலும் ரேஷன்கடைகளை திறக்க வேண்டும்.
நாஜிம்(தி.மு.க): ரேஷன்கடைகளில் 10 சதவீத பேருக்கு இலவச அரிசி கிடைக்காமல் போகிறது. சிகப்பு கார்டிலிருந்து, மஞ்சள் கார்டாக மாற்றப்பட்டவர்களுக்கு உடனடியாக அரிசி கிடைப்பதில்லை.
பி.ஆர்.சிவா: ஏழை மக்களுக்கு சென்றடைய வேண்டிய இலவச அரிசியை ஏன் பிடித்தம் செய்ய வேண்டும். 100 சதவீத பேருக்கும் இலவச அரிசி சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.
அரசு கொறடா ஆறுமுகம்: எனது தொகுதியில் ரேஷன் கடை இல்லாததால் ஊசுடு தொகுதியில் ரேஷன் அரிசியை வாங்க வேண்டியுள்ளது. ரேஷன் கடைகளை அந்தந்த தொகுதியில் தான் அமைக்க வேண்டும்.
அனிபால் கென்னடி (தி.மு.க): சமுதாய கூடங்களை ரேஷன் கடைகளாக மாற்றியுள்ளதால் அங்கு எந்த விழாக்களையும் நடத்த முடியாமல் பொதுமக்கள் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
கல்யாணசுந்தரம் (பா.ஜ): ரேஷன் கடைளுக்கு இடம் இல்லாததால் தான் சமுதாய நலக்கூடங்கள், கோவில்களில் அரிசி வைக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னையை உடனடியாக அரசு தீர்வு காண வேண்டும்.
முதல்வர் ரங்கசாமி: சில இடங்களில் ரேஷன் கடை இல்லை என்பது சரிதான். இதனால் ரேஷன்கடை இல்லாத பகுதிகளில் வேன் மூலம் அரிசி விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். ரேஷன் கடை ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம் ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளோம். கமிஷன் தொகையையும் உயர்த்தியுள்ளோம். ஓரிரு மாதங்களில் பிரச்னைகள் அனைத்தும் சரி செய்யப்படும். குறுகிய காலத்தில் ரேஷன் கார்டுகளை மாற்றியவர்களுக்கும் அரிசி வழங்கப்படும்.
ஜான்குமார்(பா.ஜ.,): வருமான வரி, ஜி.எஸ்.டி., வரி செலுத்துவோர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு பச்சை நிற ரேஷன் கார்டு கொடுக்கலாம். அவர்களை குடியரசு தினம், சுதந்திர தினம், புதுச்சேரி சுதந்திர தினம் போன்றவற்றில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கலாம். இதன் மூலம் நிறைய பேர் மானியத்தைவிட்டு கொடுக்க வருவர்.
முதல்வர் ரங்கசாமி: இது நல்ல யோசனை. ஆனால் நாங்களும் அதனை முயற்சி செய்து பார்த்தோம். மானியத்தை விட்டு கொடுக்க பச்சை நிற ரேஷன் கார்டு கொடுக்கப்படும் என, அறிவித்தோம். ஆனால் ஒரே ஒருவர் தான் கவுரவ ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தார்.
முதல்வரின் பதிலை கேட்டதும், சட்டசபையில் சிரிப்பலை எழுந்தது.