ADDED : மார் 21, 2026 04:24 AM
புதுச்சேரி: சட்டசபை தேர்தலில் தே.ஜ., கூட்டணியில் முதல்வர் ரங்கசாமி நேற்று தட்டாஞ்சாவடி, மங்கலம் ஆகிய 2 தொகுதிகளில் மனு தாக்கல் செய்தார்.
புதுச்சேரி சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், முதல்வர் ரங்கசாமி நேற்று முன்தினம் காலை 11:00 மணிக்கு திடீரென திருச்செந்துார் முருகன் கோவிலில் வழிப்பாடு செய்ய புறப்பட்டு சென்றார்.
அங்கு, சுவாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று காலை 11:43 மணிக்கு வீட்டிற்கு வந்தார். அப்போது, முதல்வர் இன்றே (20ம் தேதி) தட்டாஞ்சாவடி, மங்கலம் தொகுதிகளில் போட்டியிட தயாராகி வருவதாகவும், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, மல்லாடி கிருஷ்ணாராவ், எம்.எல்.ஏ.,க்கள் ஆறுமுகம், ரமேஷ், லட்சுமிகாந்தன், முன்னாள் அமைச்சர் தியாகராஜன், என்.ஆர்.காங்., பொதுச் செயலாளர் ஜெயபால், முன்னாள் எம்.எல்.ஏ., கோபிகா உள்ளிட்டோர் முதல்வரை சந்தித்து பேசினர்.
தொடர்ந்து, முதல்வர் வீட்டில் இருந்து துணை சபாநாயகர் ராஜவேலு - நெட்டப்பாக்கம், கோபிகா - திருபுவனை, தியாகராஜன் - பாகூர் தொ குதிகளில் என்.ஆர்.காங்., சார்பில் போட்டியிட முதல்வரிடம் இருந்து ஆசி பெற்றுக்கொண்டு வெளியே வந்து நேராக அ ப்பா பைத்தியசாமி கோவிலில் வழிபாடு செய்துவிட்டு மனு தாக்கல் செய்ய புறப்பட்டு சென்றனர்.
பின், பா.ஜ., மாநில தேர்தல் பொறுப்பாளர் மான்சுக் மாண்டவியாவை சந்தித்து, முதல்வர் ரங்கசாமி அறிவுறுத்தலின் பேரில், பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் லட்சுமிநாராயணன், ஜெயபால், மல்லாடி கிருஷ்ணராவ், பக்தவசலம் உள்ளிட்ட குழுவினர் 12.53 மணிக்கு முதல்வர் வீட்டில் இருந்து தனியார் ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றனர்.
தொடர்ந்து, மதியம் 1.05 மணிக்கு வேட்பு மனுவுடன் வீட்டில் இருந்து வெளியே வந்த முதல்வர் ரங்கசாமி கார் மூலம் கதிர்காமம், கதிர்வேல் சுவாமிகள் கோவிலுக்கு நேராக சென்று, அங்கு வேட்பு மனுவிற்கான படிவத்தில் கையெழுந்திட்டார். பின், சுவாமி தரிசனம் செய்தபோது, முருகர் காலடியில் இருந்து மரிகொழுந்து பூ கீழே விழுந்து முதல்வருக்கு ஆசி வழங்கியது. அந்த மரிகொழுந்து பூவை எடுத்து தனது சட்டை பாக்கெட்டியில் வைத்து கொண்டார்.
பின், 1.23 மணிக்கு முருகன் கோவிலில் இருந்து புறப்பட்டு, அப்பா பைத்தியசாமி கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார். தொடர்ந்து, 1.40 மணிக்கு தட்டாஞ்சாவடி ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிடுவதற்கு மனு தாக்கல் செய்தார். பிறகு, அங்கிருந்து நேராக சாரம் பழைய கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று, மங்கலம் தொகுதியில் போட்டியிடுவதற்கு மனு தாக்கல் செய்தார்.
இதற்கிடையே, கடந்த தேர்தலில் மங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் தேனீ ஜெயக்குமார், இந்த முறை முதல்வர் ரங்கசாமி போட்டியிட தொகுதியை விட்டு கொடுத்தார். மேலும், முதல்வர் மனு தாக்கல் செய்தபோது, அவரும் உடன் இருந்தார்.
