துப்புரவு பணியாளர் சம்பளம் : தொழிற்சங்கம் எச்சரிக்கை
துப்புரவு பணியாளர் சம்பளம் : தொழிற்சங்கம் எச்சரிக்கை
ADDED : மார் 03, 2026 04:04 AM
புதுச்சேரி: மருத்துவமனைகளில் துப்புரவுப் பணி ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவனம், ஊழியர்களுக்கு முறையான ஊதியம் வழங்ககோரி தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது.
புதுச்சேரி அரசுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஒரு ஊழியருக்கு மெட்டீரியல் மற்றும் இ.பி.எப்., உட்பட ரூ.25,000- ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த ஓராண்டாக அரசு நிதி வழங்கி வருகிறது. இதன்படி, ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 15,000- சம்பளமாக வழங்கப்பட வேண்டும் என தொழிலாளர் துறை அறிவுறுத்தியுள்ளது.
ஆனால், சம்பந்தப்பட்ட நிறுவனம் இன்னும் 2015-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட பழைய ஊதியத்தையே வழங்கி வருவதாக ஊழியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
2024 அக்டோபர் முதல் வழங்கப்பட வேண்டிய புதிய ஊதிய உயர்வு இன்னும் அமல்படுத்தப்படவில்லை. போதிய ஊழியர்களை நியமிக்காததால், தற்போது பணியில் உள்ளவர்களுக்கு வேலைப்பளு அதிகரித்து மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். உடன் புதிய ஊதியத்தை வழங்கி, ஊழியர் எண்ணிக்கையை அதிகரிக்காவிட்டால், தொழிலாளர் துறை சமரச அதிகாரி அலுவலகத்தில் முறைப்படி 'தாவா' எழுப்பப்படும் என புதுச்சேரி பாட்டாளி தொழிற்சங்கத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
