ADDED : செப் 30, 2024 05:51 AM

புதுச்சேரி: உழவர் கரை நகராட்சி சார்பில் கனகன் ஏரியில் நடந்த சிறப்பு துப்புரவு பணியில், 400 கிலோ குப்பைகள் அகற்றப்பட்டன.
மத்திய அரசின் வீட்டு வசதி நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் 'ஸ்வச் பாரத் மிஷன் - துாய்மை இந்தியா திட்டம்' தொடங்கப்பட்டு, 10,ம் ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், கடந்த, 17,ம் தேதி துவங்கி 'துாய்மையே சேவை -2024' என்ற பிரசாரம் நடந்து வருகிறது.
இந்தாண்டு, 'துாய்மை பழக்கம் - தார்மீக ஒழுக்கம்' என்ற கோட்பாட்டினை வலியுறுத்தும் விதமாக, உழவர்கரை நகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பல்வேறு பங்கேற்பு நடவடிக்கைகள் மூலம், நீண்ட நாட்களாக சுத்தம் செய்யப்படாத இடங்களை கண்டறிந்து தொடர் துப்புரவு பணிகள் மேற்கொண்டு பொது இடங்களை துாய்மையாக வைத்திருக்கும் செயல்பாட்டினை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக உழவர் கரை நகராட்சி சார்பில், சிறப்பு துப்புரவு பணியில் நேற்று கனகன் ஏரியில் நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் தலைமையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் இந்திய முன்னாள் ராணுவ வீரர்கள் லீக் அமைப்பை சேர்ந்த, முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் புதுச்சேரி நலப்பணி சங்க உறுப்பினர்கள், ஈஸ்டு கோஸ்ட் நர்சிங் கல்லுாரி மாணவர்கள், நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், 125,க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, 'துாய்மை பழக்கம்
தார்மீக ஒழுக்கம்' என்ற கோட்பாட்டினை, வலியுறுத்தி துப்புரவு பணியை மேற்கொண்டனர். இந்த சிறப்பு துப்புரவு பணியில் ஏரியை சுற்றி உள்ள பகுதிகளில், 400 கிலோ குப்பைகள் அகற்றப்பட்டன.