புதுச்சேரியில் ஆதிதிராவிட மாணவர் விடுதிகள் மூடல்: மாணவர்கள் அவதி
புதுச்சேரியில் ஆதிதிராவிட மாணவர் விடுதிகள் மூடல்: மாணவர்கள் அவதி
ADDED : ஏப் 27, 2026 06:03 PM

புதுச்சேரி: லாஸ்பேட்டை, தட்டாஞ்சாவடி, பாகூர் பகுதிகளில் இயங்கிய ஆதிதிராவிட மாணவ, மாணவியர்களுக்கான விடுதிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஆதிதிராவிட மாணவ, மாணவிகளுக்காக புதுச்சேரியில் 16, காரைக்காலில் 10, ஏனாமில் 2 என மொத்தம் 28 விடுதிகள் அமைந்துள்ளன. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் இந்த விடுதிகளில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். ஆனால், விடுதிகளுக்காக ஒதுக்கப்படும் நிதி சரியாக செலவிடப்படாததால் அவை மோசமாக இயங்கி வருவதாக மாணவ, மாணவிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், லாஸ்பேட்டை தாகூர் கலைக்கல்லுாரி அருகே இயங்க வந்த அடுக்கு மாடி மாணவர்கள் விடுதி பழுதடைந்ததால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. இதனால், அங்கு தங்கி பயின்று வந்த மாணவர்கள், குயவர்பாளையத்தில் உள்ள மாணவர்கள் விடுதிக்கு மாற்றப்பட்டது.
இதேபோல், தட்டாஞ்சாவடி ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் அருகே இயங்கி வந்த மாணவர்கள் விடுதியும் கடந்த ஆண்டு மூடப்பட்டது. அங்கு தங்கி பயின்ற 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், வில்லியனுார் மாணவர்கள் விடுதிகளுக்கு மாற்றப்பட்டு, சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும், பாகூர் பகுதியில் இயங்கி வந்த மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் விடுதிகளும் பழுதடைந்து மூடப்பட்டுள்ளன.
இதுபோன்று, புதுச்சேரியில் இயங்கி வந்த 16 ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் விடுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் போதிய பராமரிப்பு இன்றி 4 மாணவர்கள் விடுதியும், 1 மாணவியர் விடுதியும் மூடப்பட்டுள்ளன.
ஆனால், அதில் ஒரு விடுதி கூட இதுவரையில் சீரமைக்கப்படாமல் இருந்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதிகளில் பயிலும் ஆதிதிராவிட மாணவ, மாணவியர்கள், விடுதி மாற்றம் காரணமாக நீண்ட துாரம் சென்று வரும் அவலநிலை நிலவி வருகிறது.
ஆகையால், பழுதடைந்து மூடப்பட்டுள்ள ஆதிதிராவிட மாணவ, மாணவியர்களுக்கான விடுதிகளை உடனடியாக சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
