/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துணிக்கடை உரிமையாளரிடம் ரூ.4.65 லட்சம் மோசடி
/
துணிக்கடை உரிமையாளரிடம் ரூ.4.65 லட்சம் மோசடி
ADDED : ஜூலை 29, 2025 09:40 PM
புதுச்சேரி; துணிக்கடை உரிமையாளரிடம் ரூ.4.65 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தமிழக வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, நல்லவாடு, அங்காளம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சிவபாலன், 27; வேல்ராம்பட்டு, அங்கம்மாள் சத்திரம் வீதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவரிடம், அதேப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த காஞ்சிபுரம் மாவட்டம், ஆதம்பாக்கம், கிழக்கு கரிகாலன் தெருவை சேர்ந்த குமரேசன் என்பவர் பழக்கமானார்.
பின், குமரேசன் சென்னையில் சமிரா டிரேடர்ஸ் பெயரில் கடை நடத்தி வருவதாகவும், கிரெடிட் கார்டு மூலம் பணம் பரிவர்த்தனை செய்வதன் மூலம் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என, கூறியுள்ளார். இதையடுத்து, சிவபாலன் முதற்கட்டமாக 2 லட்சம் ரூபாய் முதலீடு செய்தபோது, அந்த பணத்தை சரியாக திரும்ப கொடுத்ததுடன், கூடுதலாக 10 ஆயிரம் ரூபாயை குமரேசன் கொடுத்தார்.
இதனால், சிவபாலனுக்கு குமரேசன் மீது நம்பிக்கை அதிகரித்தது. இதையடுத்து, குமரேசனிடம் பல்வேறு தவணைகளாக 4 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். அதன்பின் குமசேரனிடம் இருந்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து, சிவபாலன், ஆதம்பாக்கத்தில் உள்ள குமரேசன் வீட்டிற்கு சென்று விசாரித்தபோது, அவர் வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது. சிவபாலன் அளித்த புகாரின் பேரில், குமரேசன் மீது முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.