/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சென்னையில் மேக வெடிப்பு புதுச்சேரியிலும் 'அலர்ட்'
/
சென்னையில் மேக வெடிப்பு புதுச்சேரியிலும் 'அலர்ட்'
ADDED : செப் 01, 2025 06:59 AM
புதுச்சேரி : சென்னையில் மேக வெடிப்பு சம்பவத்தினை தொடர்ந்து புதுச்சேரியில் அனைத்து அரசு துறைகளும் அலர்ட் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மணலியில் மேகவெடிப்பு காரணமாக 271.5 மி.மீ., மழை கொட்டி தீர்த்துள்ளது. மேக வெடிப்பு காரணமாகவே சென்னையில் அதிக அளவில் மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், புதுச்சேரியிலும் மேக வெடிப்பு அலர்ட் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் அனைத்து அரசு துறைகளுக்கும் அவசர சுற்றிக்கை அனுப்பி, தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் அனுப்பியுள்ள சுற்றிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னையில் ஏற்பட்ட மேகவெடிப்பு சம்பவத்தை கருத்தில் கொண்டு, அனைத்து அவசர சேவைப் பிரிவு, துறை சார்ந்த துறைகளும் உடனடியாக தங்கள் கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் அவசரத் தயார்நிலை திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
சென்னை வானிலை மைய இயக்குநர், புதுச்சேரியில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளார். இருப்பினும், மேகவெடிப்புகளை முன்கூட்டியே கணிக்க முடியாது. அவை ஏற்பட்ட பின்னரே கண்டறியப்படுகின்றன, எனவே அதிகபட்ச எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
சென்னை புதுச்சேரிக்கு புவியியல் ரீதியாக அருகாமையில் இருப்பதால், அனைத்து அவசர சேவைப் பிரிவு துறைகள், -குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகள், பொதுப்பணித் துறை, மின்சாரத் துறை மற்றும் காவல்துறை-எந்தவொரு எதிர்பாராத சம்பவங்களுக்கும் உடனடியாக பதிலளிக்க உயர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
அனைத்து அரசு துறைகள் ஆயத்த நடவடிக்கைகளையும் உறுதி செய்ய வேண்டியது முக்கியம்.
காவல்துறை எந்தவொரு அவசர நிலையையும் சமாளிக்க போக்குவரத்து மேலாண்மை மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்க தயார் நிலையில் இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.