அரவிந்தர் ஆசிரமத்தில் முதல்வர், குஜராத் துணை முதல்வர் சந்திப்பு
அரவிந்தர் ஆசிரமத்தில் முதல்வர், குஜராத் துணை முதல்வர் சந்திப்பு
UPDATED : நவ 17, 2026 05:59 PM
ADDED : நவ 17, 2026 05:54 PM

புதுச்சேரி: புதுச்சேரியில், அரவிந்தர் ஆசிரமத்தின் நுாற்றாண்டு விழாவையொட்டி, குஜராத் மாநில துணை முதல்வர் ஹர்ஷ் சங்கவி, முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினார்.
அரவிந்தர் ஆசிரமத்தில் நடந்த சந்திப்பின்போது, ஆரோவில் அறக்கட்டளை செயலாளரும், குஜராத் அரசின் கூடுதல் தலைமைச் செயலாளருமான ஜெயந்தி ரவி உடனிருந்தார்.
அப்போது, ஆரோவில் சர்வதேச நகரில் துணை முதல்வர் ஹர்ஷ் சங்கவி மேற்கொண்ட சுற்றுப்பயணம் குறித்தும், ஆரோவிலின் அடையாளமாக விளங்கும் மாத்ரிமந்திர், யூனிட்டி பெவிலியனில் அமைந்துள்ள அமைதி மேசை, சாவித்ரி பவன் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்ட அனுபவங்கள் குறித்து முதல்வர் ரங்கசாமியிடம் ஜெயந்தி ரவி தெரிவித்தார்.
மேலும், ஆரோவிலில் உள்ள ஸ்வரம் இசை மையம் சார்பில் பாரம்பரிய இசைக்கருவிகள் தயாரிப்பு மற்றும் ஒலி சிகிச்சை தொடர்பாக மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
குஜராத் மாநிலம் வாட்நகரில், இந்தியாவின் பாரம்பரிய இசையைப் போற்றும் வகையில் 'தானா ரிரி' என்ற பிரமாண்ட இசை அருங்காட்சியகத்தை அமைக்க பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளதையும், இந்த முயற்சிக்கும் ஆரோவிலில் நடைபெறும் இசை மற்றும் ஒலி ஆராய்ச்சிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.
குஜராத் – புதுச்சேரி இடையிலான கலாசார மற்றும் வளர்ச்சித் தொடர்புகளை மேம்படுத்தும் வகையில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, குஜராத் மாநிலத்திற்கு வருகை தர வேண்டும் என துணை முதல்வர் ஹர்ஷ் சங்கவி அழைப்பு விடுத்தார்.
இந்த சந்திப்பு இரு மாநிலங்களுக்கு இடையிலான ஆன்மிக, கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்தது.
