/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மத்திய சிறையில் கலெக்டர் திடீர் ஆய்வு
/
மத்திய சிறையில் கலெக்டர் திடீர் ஆய்வு
ADDED : நவ 23, 2024 05:40 AM

புதுச்சேரி : காலாப்பட்டு மத்திய சிறையில் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், கைதிகளின் குறைகளை கேட்டறிந்தார்.
காலாப்பட்டு மத்திய சிறையில் 250க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். தண்டனை கைதி கருணா பரோல் விடுமுறையில் சென்று தலைமறைவானார்.
போலீசார் கருணாவை கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர். தற்போது ஜாமின் மூலம் வெளியேறியுள்ளார். கருணா தப்பித்து சென்ற பின்பு, பரோல் விடுமுறை கொடுப்பதில் சிறை நிர்வாகம் கடும் நெருக்கடி அளித்தது. இதனால் தண்டனை கைதிகள் சமையல் செய்யும் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதைத் தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் நேற்று காலை காலாப்பட்டு சிறையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சிறையில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள், கைதிகளுக்கு உணவு தயாரிக்கும் சமையல் கூடத்தை பார்வையிட்டார். சமையல் கூடத்தை சுத்தமாக பராமரிக்கவும், சமையல் கூடத்தை நவீனப்படுத்தி, கூடுதலாக 2 புகை வெளியேற்றும் மின் விசிறி பொருத்தும்படி அறிவுறுத்தினார்.
பழுதடைந்துள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை சரிசெய்து தரும்படி கைதிகள் கோரிக்கை விடுத்தனர். அனைத்து கோரிக்கைகளையும் சட்டப்படி ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் குலோத்துங்கன் தெரிவித்தார். ஆய்வின்போது சப் கலெக்டர் இசிட்டா ரதி, தாசில்தார் செந்தில்குமார், சிறைத்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன், சிறை ஊழியர்கள் உடனிருந்தனர்.

