பரிசு கூப்பன் வழங்கிய விவகாரம்; விசாரணை நடப்பதாக கலெக்டர் பேட்டி
பரிசு கூப்பன் வழங்கிய விவகாரம்; விசாரணை நடப்பதாக கலெக்டர் பேட்டி
ADDED : ஏப் 09, 2026 10:45 PM

புதுச்சேரி: பாகூரில் வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் குலோத்துங்கன் தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நேற்று காலை 7 மணிக்கு துவங்கியது. பொது மக்கள் காலை முதலே வரிசையில் நின்று தங்களது ஓட்டை பதிவு செய்தனர்.
இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் குலோத்துங்கன் நிருபர்களிடம் கூறியதாவது; புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான மாதிரி வாக்குப்பதிவு அனைத்து ஓட்டு சாவடிகளிலும் காலை 5.30 மணிக்கு துவங்கி 7 மணிக்கு முடிவடைந்தது. தொடர்ந்து, முறையான ஓட்டுப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.
காலை முதலே மக்கள் அதிக ஆர்வத்துடன் வந்து தங்களது ஓட்டினை பதிவை செய்து வருகின்றனர். வாக்காளர்களுக்காக, ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும், தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.
புதுச்சேரி மக்கள் அனைவரும் தங்களது ஓட்டினை பதிவு செய்து, நுாறு சதவீதம் ஓட்டு பதிவு இருக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். தேர்தல் குறித்த விழிப்புணர்வும், ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கையாலும் தான், பொதுமக்களை காலை முதலே வாக்குப்பதிவு செலுத்தி வருகின்றனர். அதனை பார்ப்பதற்கு சந்தோஷமாக உள்ளது. பாகூரில் வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பாக புகார்கள் வந்துள்ளது. அது குறித்து விசாரித்து வருகிறோம்' என்றார்.
