ADDED : ஏப் 20, 2026 11:11 PM

வில்லியனுார்: வில்லியனுார் அருகே தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லுாரி மாணவி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
வில்லியனுார் அடுத்த உறுவையாறுபேட்டையை சேர்ந்தவர் சிவசுந்தரமூர்த்தி; கருவடிக்குப்பம் மயானத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மூத்த மகள் சோபிகா, 22, லாஸ்பேட்டை அரசு பட்ட மேற்படிப்பு கல்லுாரியில் எம்.ஏ., படித்து வந்தார். அவருக்கு கடந்த மாதம் திடீர் காய்ச்சல் ஏற்பட்டு அவதியடைந்தார்.
அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். உடல்நிலை மோசமடைந்ததால், அங்கிருந்து கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். பின், மேல் சிகிச்சைக்காக ஜிப்மரில் அனுமதித்தனர். அங்கு உடல்நிலை தேரியதால், டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்பினர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை சோபிகாவுக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக கதிர்காம அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சோபிகாவை டாக்டர் பரிசோதித்து, அவர் வரும் வழியில் இறந்து விட்டதாக கூறினார். உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.
சிவசுந்தரமூர்த்தி புகாரின் பேரில், மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். சோபிகாவின் மரணம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளனு.
