விளையாட்டுப் போட்டிகள் நடத்தாததை கண்டித்து கல்லுாரி மாணவர்கள் மறியல்
விளையாட்டுப் போட்டிகள் நடத்தாததை கண்டித்து கல்லுாரி மாணவர்கள் மறியல்
ADDED : மார் 05, 2026 05:01 AM

திருபுவனை: மதகடிப்பட்டு அருகே அரசு கல்லுாரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
மதகடிப்பட்டு அடுத்த கலிதீர்த்தாள்குப்பத்தில் காமராஜர் அரசு கலைக் கல்லுாரியில், கடந்த இரண்டு ஆண்டுகளாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவில்லை. கல்லுாரி மாணவ, மாணவியர் 50க்கும் மேற்பட்டோர் மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்றுள்ளனர். ஆனால் கல்லுாரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்களை மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க அனுமதிப்பதில்லை.
இது குறித்து மாணவர்கள் கல்லுாரி முதல்வர் மற்றும் பேராசிரியர்களிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. போதிய நிதி இல்லை என, முதல்வர் கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று கல்லுாரிக்கு வந்த மாணவ, மாணவிகள் காலை 10:00 மணிக்கு வகுப்புகளை புறக்கணித்து கல்லுாரி நுழைவாயில் எதிரே கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மதகடிப்பட்டு - திருக்கனுார் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த திருபுவனை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கல்லுாரியில் ஆண்டுதோறும் நடத்தப்படும் விளையாட்டு போட்டிகள், ஆண்டு விழா நடத்தப்படாததைக் கண்டித்தும், மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்க வலியறுத்தியும் போராட்டம் நடத்துவதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் கல்லுாரி முதல்வரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின், மாணவர்களிடம் உங்களின் கோரிக்கைகள் குறித்து உயர்கல்வித்துறை அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் உறுதி அளித்தனர். இதனை ஏற்று மாணவர்கள் காலை 11:00 மணியளவில் மறியலை கைவிட்டு வகுப்பறைக்கு சென்றனர். இதனால், மதகடிப்பட்டு - திருக்கனுார் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
