/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கல்வி உதவித்தொகை வழங்கும் பணி துவக்கம்
/
கல்வி உதவித்தொகை வழங்கும் பணி துவக்கம்
ADDED : ஜன 25, 2025 05:37 AM

புதுச்சேரி : ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் பணியை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பல்வேறு பள்ளி மற்றும் கல்லுாரிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த மாணவர்களின் கல்வி செலவினை ஏற்கிறது.
2024-25ம் கல்வி ஆண்டில் பயிலும் 7,195 பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக 40 கோடியே 71 லட்சத்து 98 ஆயிரத்து 756 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி சட்டசபையில் நேற்று நடந்தது. முதல்வர் ரங்கசாமி, பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் பணியை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து கல்வி தொகை அந்தந்த அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் பணி துவங்கப்பட்டது.
முதல்வர் ரங்கசாமி பேசுகையில், 'தகுதி வாய்ந்த அனைவருக்கும் அரசே கல்விக் கட்டணத்தைச் செலுத்துவதால், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரி நிர்வாகங்கள் கல்விக் கட்டணத்தைச் செலுத்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ மாணவர்களை வலியுறுத்தக் கூடாது என, கேட்டுக் கொண்டார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் இளங்கோவன், துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.