/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ள ஆணையர் எச்சரிக்கை
/
ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ள ஆணையர் எச்சரிக்கை
ADDED : ஜூன் 26, 2025 11:25 PM

திருக்கனுார்:கூனிச்சம்பட்டில் கழிவுநீர் வெளியேறும் வழிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள ஆணையர் எழில்ராஜன் நோட்டீஸ் வழங்கி, எச்சரிக்கை விடுத்தார்.
மண்ணாடிப்பட்டு தொகுதி கூனிச்சம்பட்டு காலனி குடியிருப்பு மத்தியில் தேங்கும் கழிவுநீரால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
இதையடுத்து, அப்பகுதியை ஆய்வு செய்த அமைச்சர் நமச்சிவாயம், குடியிருப்புகளில் தேங்கும் கழிவுநீரை உடனடியாக அப்புறப்படுத்தவும், கழிவுநீர் செல்லும் வழியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், கொம்யூன் ஆணையர் எழில்ராஜன் தலைமையிலான அதிகாரிகள், ஊழியர்கள் நேற்று பொக்லைன் இயந்திரம் மூலம் கழிவுநீர் செல்லும் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஆக்கிரமிப்பு செய்திருந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், ஆக்கிரமிப்புகளை தங்களாகவே அகற்றி கொள்வதற்கு கால அவகாசம் கேட்டனர்.
இதையடுத்து, ஆணையர் ஒரு வார காலம் அவகாசம் அளித்து நோட்டீஸ் வழங்கினார். மேலும், ஒரு வாரத்திற்குள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை எனில், போலீஸ் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என, எச்சரிக்கை விடுத்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.