/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சகட்டு மேனிக்கு இடைவெளி அமைப்பால் பொது மக்கள்... அதிருப்தி; 3.1 கி.மீ., துாரத்தில் 29 இடங்களில் சென்டர் மீடியனில் வழி
/
சகட்டு மேனிக்கு இடைவெளி அமைப்பால் பொது மக்கள்... அதிருப்தி; 3.1 கி.மீ., துாரத்தில் 29 இடங்களில் சென்டர் மீடியனில் வழி
சகட்டு மேனிக்கு இடைவெளி அமைப்பால் பொது மக்கள்... அதிருப்தி; 3.1 கி.மீ., துாரத்தில் 29 இடங்களில் சென்டர் மீடியனில் வழி
சகட்டு மேனிக்கு இடைவெளி அமைப்பால் பொது மக்கள்... அதிருப்தி; 3.1 கி.மீ., துாரத்தில் 29 இடங்களில் சென்டர் மீடியனில் வழி
ADDED : ஜூலை 17, 2024 06:29 AM

புதுச்சேரி : அரும்பார்த்தபுரம் - இந்திரா சிக்னல் வரையிலான சென்டர் மீடியனில், பெட்டி கடைகள் வியாபாரம் பாதிக்க கூடாது என்பதற்காக, சகட்டு மேனிக்கு இடைவெளி விட்டு பொதுப்பணித்துறை அமைத்து வருவது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியில் ஒவ்வொரு நாளும் வாகன எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. மொத்த மக்களின் எண்ணிக்கையை விட வாகனங்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த சூழ்நிலையில், வாகன விபத்துக்களை தடுக்க மாவட்ட சாலை பாதுகாப்பு குழு மாதம் ஒரு முறை கூட்டம் நடத்தி, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஆனால் ஆட்சியாளர்கள் மற்றும் ரவுடிகள் சிபாரிசுடன் செல்வோருக்கு, விதிமுறைகளை மீறி சாலை, சென்டர் மீடியன் அமைக்கும் பணியை பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகிறது. புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், எம்.என்.குப்பம் முதல் இந்திரா சிக்னல் வரையிலான 11.24 கி.மீ., சாலை அகலப்படுத்தி சென்டர் மீடியன், மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
வில்லியனுார் மூலக்கடையில் இருந்து இந்திரா சிக்னல் வரை சாலையின் இரு பக்கமும் 'ப' வடிவ மழைநீர் வடிகால் வாய்க்கால், சென்டர் மீடியன் அமைக்கும் பணி தற்போது நடக்கிறது.
இதில், பொதுப்பணித்துறை, போக்குவரத்து போலீசார் கைகோர்த்து கொண்டு சகட்டுமேனிக்கு சென்டர் மீடியனில் இடைவெளி விட்டு அமைத்து வருகின்றனர்.
சாலை பாதுகாப்பிற்கு அமைக்கப்படும் சென்டர் மீடியன், சகட்டு மேனிக்கு விடப்படும் இடைவெளிகளால் சாலை விபத்துகள் நடக்கும் இடங்களாக மாறி வருகிறது.
அரும்பார்த்தபுரம் தக்ககுட்டை ஆரம்பித்து இந்திரா சிக்னல் வரை 3.1 கி.மீ., துாரத்தில், தெரு சாலை சந்திக்கும் இடங்கள் என கூறி 29 இடங்களில் சென்டர் மீடியனில் இடைவெளி விட்டுள்ளனர்.
இதுதவிர தற்போது டீ கடை, காபி கடை, பெட்டி கடைகளின் வியாபாரம் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக, கடைகள் முன்பு 100 அடி அகலத்திற்கு இடைவெளி விட்டு பொதுப்பணித்துறை, போக்குவரத்து போலீசார் கடை உரிமையாளர்களுக்கு தங்களின் விசுவாசத்தை காண்பித்து வருகின்றனர்.
இந்த சாலையில் இடைவெளி அமைக்க அனுமதி கொடுத்த பொதுப்பணித்துறை, போக்குவரத்து போலீசாரின் குடும்பத்தினர், பிள்ளைகள், உறவினர்கள் எதிர்காலத்தில் இதே சாலை வழியாக செல்லலாம்.
இடைவெளி வழியாக குறுக்கே திடீரென புகும் போதை ஆசாமிகள் மூலம் விபத்து ஏற்பட்டால் அதிகாரிகளின் பிள்ளைகளும் விபத்தில் சிக்குவர். எனவே, பொதுமக்களின் உயிர் சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தில், அரசு அதிகாரிகள் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும். தேவையற்ற இடைவெளிகளை மூடி பொதுமக்களின் உயிர்கள் காப்பாற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.