காங்., தலைவருக்கு வேட்டு தலைமையில் குவியும் புகார்கள்
காங்., தலைவருக்கு வேட்டு தலைமையில் குவியும் புகார்கள்
ADDED : மே 03, 2026 05:20 AM
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க டில்லி மேலிட காங்., தலைவர்கள் அதிக ஆர்வம் காட்டினர். த.வெ.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால், அதிக தொகுதி கிடைக்கும். இளம் வாக்காளர்களிடம் காங்., கட்சியை கொண்டு செல்லலாம்.
கேரளா, புதுச்சேரியில் வெற்றி வாய் ப்புக்கு உதவக்கூடும் என்ற பல்வேறு வகையான பயன்களை கருத்தில் கொண்டு எப்படியாவது த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க காங்., தரப்பில் படாத பாடுபட்டனர்.
ஆனால் இதற்கு நேர் மாறாக தமிழக காங்., தலைவர் செல்வப் பெருந்தகை தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து த.வெ.க., கனவுக்கு வேட்டு வைத்தார்.
இவரைத் தொடர்ந்து புதுச்சேரியில், இண்டி கூட்டணியில் தி.மு.க., இந்திய கம்யூ., மற்றும் வி.சி., போட்டியிட்ட தொகுதிகளில் காங்., சார்பில் 'பி' பார்ம் வழங்கப்பட்ட வேட்பாளர்களே போட்டியிட்டனர். இதனால், தங்கள் வெற்றி பாதிக்கப்படும் என, எரிச்சலான புதுச்சேரி தி.மு.க.,வினர் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம், காங்., தலைவர் வைத்திலிங்கத்தின் செயல்பாடுகள் குறித்து புலம்பி தீர்த்தனர்.
இதனால் கடும் கோபத்தில் முதல்வர் ஸ்டாலின் உ ள்ளார். மேலும் பல்வேறு குளறுபடிகள் உடன் தேர்தலை சந்தித்ததால் காங்., கட்சியில் உள்ளவர்களும் வைத்திலிங்கத்தை உடனடியாக மாற்ற வேண்டி கட்சி தலைமைக்கு புகார் மனுக்களை அனுப்பி வருகின்றனர். இதனால், எப்போது வேண்டுமானாலும், புதுச்சேரி காங்., தலைவர் மாற்றப்படலாம் என, கதர் சட்டையினர் கூறி வருகின்றனர்.
