ADDED : செப் 04, 2026 10:53 PM
புதுச்சேரி: புதுச்சேரி காவலர் பயிற்சி பள்ளியில் உதவி சப் இன்ஸ்பெக்டர் முதல் இன்ஸ்பெக்டர் வரையிலான போலீஸ் அதிகாரிகளுக்கு, பெண்கள் பாதுகாப்பு என்ற தலைப்பிலான ஐந்து நாள் சிறப்பு பயிற்சி கடந்த 31ம் தேதி துவங்கியது.
பயிற்சியினை சீனியர் எஸ்.பி., ராஜேந்திர குமார் குப்தா தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். பயிற்சி முகாமில் பெண்களின் பாதுகாப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது, சட்ட நடைமுறைகள் மற்றும் வழக்குகளை திறம்பட கையாளுதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் சட்ட வல்லுநர்கள் மற்றும் துறை சார்ந்த நிபுணர்கள் பயிற்சி அளித்தனர். இப்பயிற்சி எஸ்.பி., ரங்கநாதன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ரகுபதி ஒருங்கிணைப்பில் நடந்தது.
பயிற்சி நிறைவு விழா நேற்று நடந்தது. விழாவில், சீனியர் எஸ்.பி., ராஜேந்திர குமார் குப்தா கலந்து கொண்டு அனைத்து பயிற்சியாளர்களுக்கும் சான்றிதழ்களை வழங்கி, பாராட்டினார். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை திறம்பட கையாள்வதற்கும் காவல் துறையினரின் சட்ட அறிவு மற்றும் தொழில்முறை திறனை மேம்படுத்தும் வகையில் இப்பயிற்சி அமைந்தது.
