/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்துவது... எப்போது? லட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருப்பு
/
வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்துவது... எப்போது? லட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருப்பு
வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்துவது... எப்போது? லட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருப்பு
வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்துவது... எப்போது? லட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருப்பு
ADDED : நவ 06, 2024 08:09 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க, தமிழக தொழில் நிறுவனங்கள் பங்கேற்கும்மெகா வேலை வாய்ப்பு முகாம் நடத்த அரசு முன்வர வேண்டும்.
புதுச்சேரி சின்னஞ்சிறிய யூனியன் பிரதேசம். அழகிய கடற்கரை, பிரஞ்சு பாரம்பரிய கட்டடங்கள், ஏராளமான சுற்றுலா தளங்கள் உள்ளது. புதுச்சேரியின் அடையாளமாக திகழ்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றிய ஏ.எப்.டி., பஞ்சாலை, சுதேசி, பாரதி மில்கள் மூடப்பட்டுவிட்டது.
லிங்காரெட்டிபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, அரியூர் தனியார் சர்க்கரை ஆலைகள் மூடப்பட்டு விட்டது. இதுதவிர திருபுவனையில் இயங்கிய கூட்டுறவு நுாற்பாலை, காற்றாலை இயந்திரங்கள் தயாரிக்கும் சுஸ்லோன் நிறுவனம் உட்பட பல நிறுவனங்கள் புதுச்சேரியை விட்டு வெளியேறி விட்டது.
இதனால் புதுச்சேரிக்கு தொழிற்சாலை சார்ந்த வரி வருவாய் குறைவு. முழுக்க முழுக்க மதுபானம் விற்பனை மூலம் மட்டுமே வருமானம் வருகிறது. சுற்றுலா பயணிகள் மூலம் தனியார் ஓட்டல்கள், ரெசார்ட்டுகளுக்கு வருவாய் கிடைக்கிறது. அரசுக்கு வருவாய் என்பது குறைவு.
இந்த சூழ்நிலையில், புதுச்சேரியில் 8ம் வகுப்பு முதல் பி.எச்டி., வரை படித்த இளைஞர்கள் 3.5 லட்சம் பேர் வேலை வாய்ப்பிற்காக, தொழிலாளர் துறை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். இதில், 1.5 லட்சம் பேர் தனியார் நிறுவனங்களில் வேலை செய்தாலும், 2 லட்சம் பேர் வேலை வாய்ப்பின்றி சுற்றி திரிந்து வருகின்றனர். சரியான வேலை வாய்ப்பு இல்லாததால் பல இளைஞர்கள் தவறான பாதையில் செல்கின்றனர்.
சிலர் இளைஞர்கள் கிடைத்த சிறிய வேலைகளை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். சிலர் டாடா ஏஸ் வாகனம் மூலம் காய்கறி, பழம், மளிகை சாமான்கள் விற்பனை செய்வதும், சாலையோரம் கடை அமைத்து ஏதேனும் வியாபாரம் செய்து குடும்பம் நடத்துகின்றனர்.
ஆயிரக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் சென்னை, பெங்களூர், ஐதராபாத் சாப்ட்வேர் கம்பெனிகளில் பணியாற்றி வருகினறனர். புதுச்சேரி அரசு ஆண்டிற்கு 2 முறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தும். இதில் உள்ளூரில் உள்ள சில நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்கிறது. அதிலும், ரூ. 8000 முதல் ரூ. 12000 சம்பளம், 2 ஆண்டுகள் அப்ரண்டீஸ் பயிற்சி அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்கின்றனர். இப்படி சம்பிரதாயத்திற்கு நடத்தும் வேலை வாய்ப்பு முகாம் கூட இந்தாண்டு ஒருமுறை (பிப்.மாதம்) மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. இதனால், புதுச்சேரி இளைஞர்கள் வேலை தேடி தமிழக தொழில் நகரங்களுக்கு செல்லும் நிலை உள்ளது.
வெளியூர்களில் இருந்து மதுபானம் குடித்து கும்மாளம் போட வரும் சுற்றுலா பயணிகளுக்காக, பல கோடி செலவு செய்து சுற்றுலா மேம்பாட்டு பணிகள், தெருவுக்கு தெரு மதுபான கடைகள், ரெஸ்ட்டோ பார்கள், பப் திறக்க ஆர்வம் காட்டும் புதுச்சேரி அரசு, மண்ணின் மைந்தர்களான இளைஞர்களுக்கு சரியான வேலை வாய்ப்பு கிடைக்க, தொடர்ச்சியாக வேலை வாய்ப்பு முகாம்களை நடத்த வேண்டும்.
அந்த வேலை வாய்ப்பு முகாம்களில், தமிழகம், பெங்களூரு, ஹைதராபாத் ஐ.டி., நிறுவனங்கள், பெரிய தொழிற்சாலைகள், கார் கம்பெனிகள் பங்கேற்க செய்ய வேண்டும். அதுபோல் மூடி கிடக்கும் ஏ.எப்.டி., பாரதி, சுதேசி மில் வளாகங்களை ஐ.டி., பார்க்குகளாக மாற்றினால் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
வயிற்று பசியை தீர்ப்பதற்கு அரசு இலவச அரிசி வழங்குவதிற்கு பதில், வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தால் இலவச அரிசி போட வேண்டிய அவசியமே ஏற்படாது. அதனால் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக அரசு சார்பில் பல வேலை வாய்ப்பு முகாம்களை ஏற்பாடு செய்து, தமிழக மற்றும் பல்வேறு மாநில தொழில் நிறுவனங்கள் பங்கேற்க செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.