/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சபாநாயகர் மீதான நம்பிக்கை தீர்மானம் வெற்றி
/
சபாநாயகர் மீதான நம்பிக்கை தீர்மானம் வெற்றி
ADDED : பிப் 13, 2025 04:57 AM
புதுச்சேரி: அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர மனு கொடுத்திருந்த சூழ்நிலையில், சபாநாயகர் மீது முதல்வர் ரங்கசாமி நம்பிக்கை தீர்மானம் சட்டசபையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரிசபாநாயகர் செல்வம் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார். எம்.எல்.ஏ.,க்களுக்கான உரிமைகளை நிலைநாட்டுவதில்லை, சட்ட விதிகள், மரபுகளுக்கு முரணாக செயல்படுவதாக எம்.எல்.ஏ.,க்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
சுயேச்சை எம்.எல்.ஏ., நேரு, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை சட்டசபை செயலர் தயாளனை சந்தித்து அளித்திருந்தார். இதேபோல் பா.ஜ., ஆதரவு அளிக்கும் சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் அங்காளன், சிவசங்கர் ஆகியோரும், சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை சட்டசபை செயலரிடம் அளித்திருந்தனர்.இந்த தீர்மானத்தின் மீது சட்டசபை கூடும்போது விவாதம் நடத்தப்படும் என, சபாநாயகர் செல்வம் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இதனால் பரபரப்பான சூழ்நிலையில் சட்டசபை கூடியது. எப்போது சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் விவாத்திற்கு எடுத்து கொள்ளப்படும் என்று அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களும் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால், நேற்று நடந்த சட்டசபை கூட்டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் அலுவல் பட்டியலில் இடம் கூட பெறவில்லை.அதேநேரத்தில் சட்டசபை கூட்டத்தின் இறுதியில் சபாநாயகர் செல்வம், முதல்வர் ஒரு முக்கிய தீர்மானத்தை கொண்டு வருவார் என, அறிவித்தார்.
இதையடுத்து முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் மீது நம்பிக்கை உள்ளது என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தீர்மானத்தை சபாநாயகர் செல்வம் குரல் வாக்கெடுப்பிற்கு அனுமதித்தார். இதில் ஆம் சொன்னவர்கள் அதிகம் என்பதால், சபாநாயகர் மீது நம்பிக்கை உள்ளதாக கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், அப்போது சபையில் வெளிநடப்பு செய்த தி.மு.க., காங்., எம்.எல்.ஏ.,க்கள் 8 பேரும் சபையில் இல்லை. சஸ்பெண்டு செய்யப்பட்ட நேரு எம்.எல்.ஏ.,வும் சபையில் இல்லை. அதேநேரத்தில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை அளித்திருந்த அங்காளன், சிவசங்கர் ஆகியோர் சபையில் இருந்தனர். அவர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லாத தீர்மானம் விவாதத்திற்கு எடுத்து கொள்ளாமலே முறியடிக்கப்பட்டது.