ADDED : நவ 06, 2024 11:27 PM
புதுச்சேரி ; புதுச்சேரியில் பள்ளிகள் அருகே தடை செய்யப்பட்ட ரூ.1.12 லட்சம் மதிப்பிலானபோதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி முழுதும் பள்ளி, கல்லுாரிகள் அமைந்துள்ள 100 மீட்டர் சுற்று அளவில் போதை பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், பெட்டிக்கடைகள் மூலம் விற்பனை அதிகரித்து வருகின்றன.
முத்தியால்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட புது வீதி தனியார் பள்ளி அருகே உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அதில், முத்தியால்பேட்டை புதுவீதியை சேர்ந்த சுந்தரி, 57; என்பவரது பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுவருவது தெரியவந்தது.
இதையடுத்து, கடையில் இருந்த ரூ.95 ஆயிரம் மதிப்பிலான போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதேபோல், முதலியார்பேட்டை 100 அடி சாலையில் போலீசார் நடத்திய சோதனையில், தேங்காய்திட்டு தனபால் நகரை சேர்ந்த மேகநாதன், 38; என்பவரது கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரூ.17 ஆயிரம் மதிப்பிலான போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக மேகநாதன் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.