ADDED : ஏப் 11, 2026 10:26 PM
புதுச்சேரி: உழவர்கரை தொகுதி முக்கிய கட்சி பிரமுகர் ஒருவர் தனது ஆதரவாளர்களைக் கட்சிப் பணி ஆற்ற வேண்டாம் எனக் கூறியது கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
உழவர்கரை தொகுதியின் முக்கிய கட்சி பிரமுகர். இவர், கடந்த சில ஆண்டுகளாகத் தொகுதியில் எங்கு இருக்கிறார் என்று தெரியாத அளவிற்கு ஒதுங்கியே இருந்தார். தொகுதியில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளில் மட்டுமே இவரைப் பார்க்க முடிந்தது. இந்நிலையில், தேர்தல் அறிவிப்பிற்கு முன் இவரது ஆதரவாளர்கள், இவர்தான் இந்த முறையும் உழவர்கரை வேட்பாளர் எனச் சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர்.
ஆனால், இந்த முறை அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவருக்குப் பதில் உழவர்கரை தொகுதி இளம் வேட்பாளர் ஒருவருக்கு கட்சி சார்பில், வாய்ப்பு வழங்கப்பட்டது. அவரும் அந்த முக்கிய பிரமுகரை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். இதனால் கட்சியின் நிர்வாகிகளும், அந்த முக்கிய பிரமுகரின் ஆதரவாளர்களும் வேட்பாளருக்காக தீவிரமாக வேலை செய்யத் துவங்கினர்.
இளம் வேட்பாளர் ஆதரவு திரட்டிய அடுத்த இரண்டு நாட்களில், அந்த முக்கிய பிரமுகர் தனது ஆதரவாளர்களுக்கு போன் செய்து, வேட்பாளருக்கு வேலை செய்ய வேண்டாம் எனக் கூறினார். அதற்கு அவரது ஆதரவாளர்கள், அவர் கட்சித் தலைவர் அறிவித்த நமது கட்சி வேட்பாளர் தானே எனக் கேட்டுள்ளனர். அதற்குப் பதிலளித்த அந்தப் பிரமுகர், நான் சொல்வதைக் கேளுங்கள். நாளை எல்லாம் மாறப்போகிறது என்று கூறினார். நள்ளிரவு நேரத்திலும் ஒவ்வொரு முக்கிய நிர்வாகிகளுடனும் 30 நிமிடங்களுக்கு மேல் அவர் பேசினார்.
இதற்குள் இந்தத் தகவல் கட்சித் தலைமைக்குச் சென்றது. கட்சித் தலைமையிலிருந்து அவரைத் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, அவர் தனது போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார். இந்த நிலையில் சுயேட்சை வேட்பாளருடன் முக்கிய பிரமுகர் சந்தித்த போட்டோக்கள் சமூக வலைதளத்தில் பரவியது.
உழவர்கரை தொகுதியில் கட்சிப் பொறுப்பு வகிக்கும் அவரது ஆதரவாளர்கள் சிலர் சுயேச்சைக்கு வேலை செய்தனர். இது கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இளம் வேட்பாளரின் வெற்றி சதவீதம் குறையும் என கட்சியினர் புலம்பி வருகின்றனர்.
