/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதிய கல்வி கொள்கையை கண்டித்து காங்., - தி.மு.க., மீண்டும் வெளிநடப்பு நாற்காலியில் ஏறி நின்று பெண் எம்.எல்.ஏ., பேசியதால் பரபரப்பு
/
புதிய கல்வி கொள்கையை கண்டித்து காங்., - தி.மு.க., மீண்டும் வெளிநடப்பு நாற்காலியில் ஏறி நின்று பெண் எம்.எல்.ஏ., பேசியதால் பரபரப்பு
புதிய கல்வி கொள்கையை கண்டித்து காங்., - தி.மு.க., மீண்டும் வெளிநடப்பு நாற்காலியில் ஏறி நின்று பெண் எம்.எல்.ஏ., பேசியதால் பரபரப்பு
புதிய கல்வி கொள்கையை கண்டித்து காங்., - தி.மு.க., மீண்டும் வெளிநடப்பு நாற்காலியில் ஏறி நின்று பெண் எம்.எல்.ஏ., பேசியதால் பரபரப்பு
ADDED : மார் 18, 2025 04:25 AM

புதுச்சேரி: நேற்றைய சட்டசபை கேள்வி நேரத்தின்போது புதிய கல்வி கொள்கை தொடர்பாக அனல் பறந்த விவாதம்:
சந்திரபிரியங்கா (என்.காங்): இந்தி தெரியாமல் நானே கஷ்டப்பட்டுள்ளேன். புதிய கல்வி கொள்கை, மும்மொழி கொள்கையை வரவேற்கிறேன். ஆனால் 5ம் வகுப்பிலேயே தொழில்படிப்புக்கு பயிற்சி அளிக்கப்படும் என, புதிய கல்வி கொள்கையில் உள்ளது. அப்படி தொழில் கற்கும் மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வராமல், சம்பாதிக்க சென்றுவிடுவார்கள். இதை 9ம் வகுப்புக்கு மேல் என மாற்றி அமைக்க வேண்டும்.
நாஜிம் (தி.மு.க): இதனால் தான் தி.மு.க., புதிய கல்வி கொள்கையை எதிர்க்கிறது.
சந்திரபிரியங்கா: உங்க பேர பிள்ளைகள் சி.பி.எஸ்.இ., படிக்கின்றனர். என் பிள்ளைகளும் சி.பி.எஸ்.இ., படிக்கின்றனர். அப்படி இருக்கும்போதும் புதிய கல்வி கொள்கையில் நான் பேச வந்த விஷயம் வேறு. இதை கேட்டதும் தி.மு.க., - காங்., எம்.எல்.ஏ.,கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
செந்தில்குமார் (தி.மு.க): உங்கள் கருத்தை சொல்லுங்கள். யார் பிள்ளை எங்கு படிக்கிறார் என விவாதிக்க வேண்டுமா?
எதிர்க்கட்சித்தலைவர் சிவா: என்.ஆர்.காங்., அரசு ஆர்.எஸ்.எஸ்., அரசாக மாறி வருகிறது. என் அப்பா செய்த தொழிலை நானும் செய்ய வேண்டுமா. இதனால் தான் நாங்கள் புதிய கொள்கையை எதிர்க்கிறோம்.
அமைச்சர் சாய்சரவணக்குமார்: குல கல்வி திட்டத்தை ராஜாஜி தான் கொண்டு வந்தார். அவர் எந்த கட்சியை சேர்ந்தவர் என வைத்தியநாதன் எம்.எல்.ஏ., பதில் சொல்ல வேண்டும்.
வைத்தியநாதன் (காங்): ஆர்.எஸ்.எஸ்., கொள்கையை பரப்ப முதல்வருக்கு நெருக்கடி ஏற்படுத்தப்படுகிறது.
நாஜிம்: புதிய கல்வி கொள்கை அமல்படுத்தி உள்ளீர்கள். இது தொடர்பாக ஏன் சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்களின் கருத்துகளை கேட்கவில்லை.
எதிர்கட்சி தலைவர் சிவா: புதிய கல்வி கொள்கையை முதல்வர் ரங்கசாமி ஏற்கிறா அல்லது எதிர்க்கிறா என்பதை சொல்ல வேண்டும்.
சந்திரபிரியங்கா: புதிய கல்வி கொள்கையில் ஆயிரம் கருத்து இருக்கலாம். அதை உங்களுக்கு ஒதுக்கிய நேரத்தில் பேசுங்கள். சபையில் ஒரே ஒரு பெண் எம்.எல்.ஏ., வாக எனது குரல்தான் ஒலிக்கிறது. அதனை எதிர்கட்சியினர் தடுப்பது ஏன்.
தொழில்சார்ந்த பயிற்சியை 9ம் வகுப்புக்கு மேல் தான் ஆரம்பிக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசுக்கு புதுச்சேரி அரசு தெரிவிக்க வேண்டும்.
அமைச்சர் நமச்சிவாயம்: தொழில் படிப்புக்கு 9ம் வகுப்பு வரை எந்த தொழிற்பயிற்சியும் கிடையாது. தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கை தொடர்பாக தவறான சித்தரிப்பை உருவாக்குகின்றனர். இல்லாததை இருப்பது போலவும், இருப்பதை இல்லாதது போலவும் தொடர்ந்து சித்தரிக்கின்றனர். அமைச்சரின் கருத்திற்கு தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சபாநாயகர் செல்வம்: கேள்வியை எழுப்பியவர்கள் மட்டுமே பேச வேண்டும். இதேபோல தொடர்ந்து பேசினால் சபையிலிருந்து வெளியேற்ற நேரிடும்.
ஆனால் தி.மு.க., -காங்.. எம்.எல்.ஏ.,க்கள் தொடர்ந்து புதிய கொள்கை தொடர்பாக சராமரியாக கேள்வி எழுப்பிய வண்ணம் இருந்தனர். அப்போது சந்திரபிரியங்கா எம்.எல்.ஏ., தனது இருக்கை மீது ஏறி நின்று, தனக்கு பேச வாய்ப்பு தாருங்கள், என்னை பேச விடுங்கள் என, கூறினார்.
எதிர்கட்சித்தலைவர் சிவா: குல கல்வியை கொண்டு வருவதை நாங்கள் எதிர்க்கிறோம். ஏன் எந்த விவாதமும் இன்றி புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கை அமல்படுத்தியதை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக கூறினார். ஆனால் அவர்கள் வெளியேறாமல் தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.
சபாநாயகர் செல்வம்: புதுச்சேரி அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை அமல்படுத்தியது யார். இந்த அரசு கொண்டுவந்தது போல பேசுகிறீர்கள். யார் கொண்டுவந்தது என மக்களுக்கு தெரியாதா.
நேரு (சுயேச்சை): நான் ஒரு முக்கிய கேள்வி கேட்டுள்ளேன். அந்த கேள்வி விவாதத்திற்கு வரக்கூடாது என திட்டமிட்டு பேசுகின்றனர்.
அப்போது பேச முடியாத தவித்த சந்திபிரியங்காவிற்கு ஆதரவாக என்.ஆர்.காங்., - பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் எழுந்துநின்று பேசினர். தி.மு.க., காங்., எம்.எல்.ஏ.,க்களும் ஒட்டுமொத்தமாக எழுந்து புதிய கல்வி கொள்கை தொடர்பாக பதிலளித்தனர். இதனால் சபையில் மீண்டும் கூச்சல், குழப்பம், அமளி ஏற்பட்டது.
சபாநாயகர் செல்வம்: சபையை நடத்துவதா இல்லையா. சி.பி.எஸ்.இ., பாடத்தை அமல்படுத்தியது யார்.
நேரு: இதுகுறித்து பல முறை பேசிவிட்டோம். மற்றவர்களின் கேள்விக்கு பதில் பெற்று கொடுக்க வேண்டும்.
நாஜிம்: புதிய கல்வி கொள்கை தொடர்பாக தனி விவாதம் நடத்த தயாரா?
சபாநாயகர்: கண்டிப்பாக நேரம் ஒதுக்கலாம், எப்போது என்று நானே சொல்கிறேன்.
நேரு: வெளிநடப்பு செய்கிறோம் என கூறியவர்களை ஏன் பேச அனுமதிக்கிறீர்கள். அவர்களை வெளியே போக சொல்லுங்கள். அதை தொடர்ந்து தி.மு.க., காங்., எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
ராமலிங்கம் (பா.ஜ.,): பா.ஜ.,வின் வாஜ்பாய் ஆட்சியில் கூட்டணியில் இருந்த கட்சி தி.மு.க., ஆனால் இன்று பா.ஜ.,வை தவறாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர்.
அமைச்சர் தேனீஜெயக்குமார்: புதிய தொழில்கொள்கை தற்போது புதிதாக வரவில்லை. 1970ல் இருந்தே அமலில் உள்ளது. காங்., தி.மு.க., அரசியல் செய்ய இதை பயன்படுத்துகின்றனர். புதிய கல்வி கொள்கையை வரவேற்கிறோம். இதன்மூலம் பொருளாதார முன்னேற்றம் வரும்.
அமைச்சர் நமச்சிவாயம்: புதிய கல்வி கொள்கையில் தேவையான திருத்தங்களை கொண்டுவர முதல்வருடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.