காங்., எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை ஜீரோ :பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் ஆரூடம்
காங்., எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை ஜீரோ :பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் ஆரூடம்
UPDATED : அக் 26, 2026 07:52 PM
ADDED : அக் 26, 2026 07:16 PM
புதுச்சேரி: பா.ஜ., சார்பில் வரும் 31ம் தேதி 10 ஆயிரம் பேர் பங்கேற்கும் பேரணி நடக்க உள்ளது.
இது குறித்து பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:
தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியாத ராகுல், பா.ஜ.,வின் தொடர் வெற்றி மீது சந்தேகப்படுவதாகவும், அதற்கு தேர்தல் கமிஷன்தான் காரணம் என தவறான குற்றசாட்டை கிளப்புகிறார். தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை ராஜினாமா செய்ய சொல்கிறார். இந்தோனிசியோ, பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளில் கலவரங்களை உருவாக்கும் கும்பலுடன் நாட்டின் இறையான்மையை கெடுப்பதற்காக கைகோர்த்துள்ளார்.
தமிழ்நாடு, கேரளாவில் எஸ்.ஐ.ஆரால்தான் காங்., ஆட்சியை பிடித்ததென்று அம்மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியா 7.8 சதவீதம் உள்நாட்டு உற்பத்தி செய்கின்ற நாடாக உள்ளது. இந்தியாவில் குறைந்த விலையில் தயாரிக்கப்படும் ராக்கெட் வெளிநாட்டு ஆராய்ச்சிக்காக அனுப்புகிறோம். தற்போது கிராமப்பகுதியில் உள்ளவர்களும் பத்ம விருதுகள் பெறுகின்றனர்.
வரும் 31ம் தேதி 'ஜனநாயகத்தை காப்போம் கும்பல் ஆதிக்கத்தை அகற்றுவோம் 'என்ற கோஷத்தோடு அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் பேரணி நடக்க உள்ளது. புதுச்சேரியில் காங்., கட்சியினர் தாங்கள்தான் ஆட்சியை பிடிக்க போவதாக கூறினர். ஆனால், 20 எம்.எல்.ஏ.,க்களாக இருந்தவர்கள் இன்று ஒன்று என வந்து நிற்கின்றனர். நிச்சயமாக அது ஜீரோவாக மாறப்போவது உண்மை. இவ்வாறு அவர் கூறினார்.
