காங்., மாநில செயலாளர் மோகன்தாஸ் அவரது ஆதரவு நிர்வாகிகள் விலகல்: புதுச்சேரி காங்கிரசில் பரபரப்பு
காங்., மாநில செயலாளர் மோகன்தாஸ் அவரது ஆதரவு நிர்வாகிகள் விலகல்: புதுச்சேரி காங்கிரசில் பரபரப்பு
ADDED : மார் 22, 2026 05:45 PM

பாகூர்: ஏம்பலம் தொகுதியில் காங்., கட்சியில், சீட்டு தர மறுத்ததால், மாநில செயலாளர் மோகன்தாஸ் மற்றும் அவரது ஆதரவு காங்., நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பதவிகளை ராஜினாமா செய்திருப்பது, புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏம்பலம் தொகுதியில், கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், காங்., கட்சி சார்பில் போட்டியிட்டு முன்னாள் அமைச்சர் கந்தசாமி தோல்விடைந்தார். இதையடுத்து, தொகுதி மக்களின் மீது அதிருப்தி அடைந்த அவர், சிறிது காலம் ஒதுங்கி இருந்தார்.
இதனிடையே, அவரது வலது கரமாக இருந்து செயல்பட்டு வந்த அவரது உறவினர் மோகன்தாஸ், ஏம்பலம் தொகுதியில் களப் பணியாற்றி, தேர்தலில் போட்டியிட, மக்களிடம் ஆதரவுகளை திரட்டி வந்தார். தற்போது, சட்டசபை தேர்தலில், மோகன்தாஸ், காங்., கட்சி சார்பில் போட்டியிட சீட்டு கேட்டு வந்தார். ஆனால், காங்., கட்சி, முன்னாள் அமைச்சர் கந்தசாமிக்கு சீட்டு வழங்கியது.
இதனால், ஏமாற்றமும், காங்., கட்சியின் மீது அதிர்ப்தியடைந்த மோகன்தாஸ், மற்றும் அவரது ஆதரவு காங்., நிர்வாகிகள் நேற்று மதியம் கிருமாம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர்.
அதில், காங்., கட்சியில் வெற்றி பெறக்கூடிய வேட்பாளரை நிராகரித்து மற்றவருக்கு சீட்டு வழங்கியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், காங்., கட்சியில் இருந்து விலகி, என்.ஆர்.காங்., கட்சியில் இணைந்து, தேர்தலை சந்தித்து, மோகன்தாசை மாநிலமே திரும்பி பார்க்கும் வகையில், அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்திட வேண்டும் என, முடிவு எடுக்கப்பட்டது.
இதையடுத்து, காங்., மாநில செயலாளர் மோகன்தாஸ், தெற்கு மாவட்ட தலைவர் குமரேஸ்வரன், பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில செயலாளர் கனிக்கண்ணன், உதயகுமார், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாநிலத் துணைத் தலைவர்கள் எத்திராஜ், பக்கிரிசாமி, மாநில செயலாளர் மூர்த்தி, நேசமணி, ராஜகுரு, ராஜ்குமார், மேற்கு மாவட்ட சதீஷ், வழக்கறிஞர் அணி விமல் ராஜ், பஞ்சாயத்து ராஜ் அமைப்பு மாநில பொதுச் செயலாளர் பாஸ்கர், தெற்கு மாவட்ட துணை தலைவர் கலிவரதன், இளைஞர் காங்., மாநில பொதுச் செயலாளர் சசிதரன், தொகுதி தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் காங்., கட்சியில் இருந்து தங்களது அடிப்படை உறுப்பினர் மற்றும் பதவியை ராஜினாமா செய்தனர்.
இதனை தொடர்ந்து, மாலை 6:00 மணியளவில், கோரிமேட்டில் உள்ள அப்பா பைத்தியம் சாமி கோவிலில், என்.ஆர்.காங்., தலைவர் முதல்வர் ரங்கசாமியை, சந்தித்து, அக்கட்சியில் இணைய புறப்பட்டனர்.
