மந்தகதியில் உப்பனாறு மேம்பாலம் கட்டுமான பணி போக்குவரத்து நெரிசலில் திணறும் காமராஜர் சாலை
மந்தகதியில் உப்பனாறு மேம்பாலம் கட்டுமான பணி போக்குவரத்து நெரிசலில் திணறும் காமராஜர் சாலை
ADDED : ஏப் 14, 2026 09:25 PM

புதுச்சேரி: நீண்ட இழுபறிக்கு பின் துவங்கப்பட்ட உப்பனாறு வாய்க்கால் மேம்பாலம் பணி, மந்தமாக நடைபெற்று வருவதால், காமராஜர் சாலை போக்குவரத்து நெரிசலால் திணறி வருகிறது.
புதுச்சேரியின் நகரப் பகுதியை இணைக்கும் பிரதானமா உள்ளது காமராஜர் சாலை மற்றும் மறைமலையடிகள் சாலை. இவ்விரு சாலைகளும் நகர வளர்ச்சி, மக்கள் தொகை மற்றும் வாகனப் பெருக்கம் காரணமாக பெருகி வரும் போக்குவரத்து நெரிசல், அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியது.
இவ்விரு சாலைகளில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் பொருட்டு, காமராஜர் சாலை மற்றும் மறைமலை அடிகள் சாலைகளை இணைக்கும் வகையில் உப்பனாற்றின் மேல், மேம்பாலம் அமைக்க கடந்த 2008ல் அரசு திட்டமிட்டு, ரூ.3.50 கோடி செலவில் பாலம் கட் ட 'பைல் பவுண்டேஷன்' அமைத்த பின், கட்டுமான பணி கிடப்பில் போடப்பட்டது. இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து, கடந்த 2016ல் என்.ஆர்.காங்., ஆட்சியின் இறுதி கட்டத்தில் அவசர அவசரமாக மீண்டும் ரூ.37 கோடி செலவில், மேம்பாலம் கட்டும் பணி துவங்கியது. இந்த மேம்பாலம் 732 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலத்தில் இருவழிச் சாலையாகவும், இருபுறமும் 1.50 மீட்டர் நடைபாதை இருக்கும் வகையிலும் கட்ட திட்டமிட்டது.
பாலத்தின் பணிகளில் 85 சதவீதம் நடந்து முடிந்து, காமராஜர் சாலை, மறைமலை அடிகள் சாலைகளை இணைக்கும் வகையில், 50 மீட்டருக்கு பாலம் கட்ட வேண்டும். நிதி பிரச்னை காரணமாக 2019ம் ஆண்டு இறுதியில், பாலத்தை கட்டி வந்த தனியார் நிறுவனம் பணிகளை நிறுத்தியதால், 6 ஆண்டுகளாக பாலம் பணி கிடப்பில் போடப்பட்டது.
அதைத் தொடர்ந்து, கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் ரூ. 29.25 கோடி செலவில் பாலத்தில் மீதும் உள்ள பணியை முடிப்பதற்கும், காமராஜர் சாலை பாலாஜி திரையரங்கம் அருகில் உள்ள பிரெஞ்சு ஆட்சியர் காலத்தில் கட்டப்பட்ட பழைய பாலத்தின் ஒரு பகுதியை இடித்து விட்டு, புதிதாக கட்டவும் பணிகள் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், பாலம் கட்டுமான பணிக்காக உப்பனாறு கால்வாயில் கொட்டப்பட்ட மண்ணால், அருகில் உள்ள கோவிந்த சாலையில், வெள்ள நீர் புகும் அபாயம் உள்ளதாக நேரு எம்.எல்.ஏ.,வின் அழுத்தம் காரணமாக மீண்டும் பாலம் கட்டுமான பணி கடந்த ஜூலை மாதம் நிறுத்தப்பட்டது.
வரும் செப்., மாதத்திற்குள் பணியை முடித்து பாலத்தை ஒப்படைக்க வேண்டியுள்ள நிலையில் நீண்ட இழுபறிக்கு பின், கடந்த மாத இறுதியில் மேம்பால பணி மீண்டும் துவங்கியது. காமராஜர் சாலையில், உப்பனாற்றின் தெற்கு பகுதியில் பிரெஞ்சு ஆட்சி காலத்தில் கட்டப்பட்டுள்ள பழைய கல்வெர்ட் பாலத்தை இடிக்கும் பணி மந்தகதியில் நடைபெற்று வருகிறது.
செங்கற்களால் கட்டப்பட்ட இந்த பழைய கல்வெர்ட் பாலத்தை முழுமையாக இடித்து அகற்றிவிட்டு, பைல் பவுண்டேஷன் அமைத்து உப்பனாற்றில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தை கொண்டு வந்து காமராஜர் சாலையோடு இணைக்க வேண்டும். இந்த பணிகள் எல்லாம், 5 மாதத்தில் முடிக்க வேண்டும்.
இந்த பாலம் கட்டுமான பணிக்காக, கடந்த 18ம் தேதி முதல் காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு பகுதி பாலம் இடிக்கப்பட்டுள்ளது. அதனால், வடக்கு பகுதி பாலத்தில் இருசக்கர வாகனங்கள் இருவழி மார்க்கத்தில் சென்று வருவதால், இச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.
காமராஜர் சாலையில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டாவது, மேம்பாலம் கட்டுமான பணியை விரைவாக கட்டி முடிக்க, கூடுதல் ஆட்கள் மற்றும் இயந்திரங்களை கொண்டு வேகப்படுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
