குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டம் கருத்தரங்கில் ஆலோசனை
குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டம் கருத்தரங்கில் ஆலோசனை
ADDED : நவ 24, 2024 06:50 AM
புதுச்சேரி : 'தினமலர்' மன அழுத்த மேலாண்மை கருத்தரங்கில் கல்வி உளவியலாளர் சரண்யா ஜெய்குமார் பேசியதாவது:
குழந்தைகளை பாதுகாக்க போக்சோ சட்டம் உள்ளது. இதனை அனைத்து பள்ளி ஆசிரியர்களும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். குழந்தை யாருடைய பாராமரிப்பில் இருக்கிறதோ அவர்களால் அக்குழந்தை பாதிக்கப்பட்டால் தண்டனை அதிகமாக இருக்கும். எனவே,பள்ளிகளில் ஆசிரியர்கள் பராமரிப்பில் குழந்தைகள் இருக்கின்றன. ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தை செய்தால்,இரண்டு மடங்கு தண்டனை கிடைக்கும்.பெண் குழந்தைகளுக்கு மட்டும் அல்ல, ஆண் குழந்தைகளும் வன்முறையால் பாதிக்கப்படுகின்றனர்.
போக்சோ வழக்கில் முன்ஜாமின் கிடைக்காது, ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை கூட சிறை தண்டனை கிடைக்கும். இந்த வழக்கில் சி.சி.,டி.வி., ஆதாரம் கூட தேவையில்லை. பாதிக்கப்பட்ட குழந்தையின் முதல் கூற்று மட்டுமே போதுமானது. இதே கூற்று மாஜிஸ்திரேட் முன்னாடி கொடுக்கும் கூற்றும் ஒன்றாக இருந்தால் கண்டிப்பாக தண்டனை கிடைக்கும்.பள்ளியில் குழந்தைகளுக்கு எதிராக எந்த பிரச்னை நடந்தாலும், பள்ளி முதல்வர் தான் பொறுப்பு. எனவே பள்ளியில் எது நடந்தாலும் பள்ளி தலைமையில் உள்ள ஆசிரியர் தான் பொறுப்பு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ஒரு குழந்தை, ஆசிரியரிடம் வந்து தான் பாதிக்கப்பட்ட விஷயத்தை கூறிய பிறகும், அதை மறைத்தால், ஆசிரியர் மீது சட்டம் பாய்ந்துவிடும். குழந்தையின் போக்சோ விஷயம் காதுக்கு வந்ததும், உடனடியாக அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் சொல்லிவிட்டு சி.எஸ்.ஆர்., பெற்றுக்கொள்ள வேண்டும். இது ஆசிரியர்களை பாதுகாக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
