ADDED : பிப் 21, 2025 04:37 AM
புதுச்சேரி: போலீஸ் டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் தலைமையில் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் காவல் துறை தலைமையகத்தில் நடந்தது.
கூட்டத்தில் சீனியர் எஸ்.பி., கலைவாணன், எஸ்.பி.,க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், போலீசார் பலர் கலந்துகெண்டனர்.
கூட்டத்தில் போலீஸ் டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம் பேசுகையில், 'புதுச்சேரியில், சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். குறிப்பாக ஒவ்வொரு போலீஸ் நிலையங்களில் உள்ள டாப்-10 ரவுடிகள் பட்டியல்களில் உள்ளவர்களை கண்காணிக்க தனியாக குற்றப்பிரிவு போலீசாரை நியமிக்க வேண்டும்.
அவர்கள் நாள்தோறும் அந்த ரவுடிகளை கண்காணிக்க வேண்டும். தேவைப்பட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்கு பரிந்துரைக்கலாம். உள்ளூரில் இல்லை என்றாலும் எங்கு செல்கிறார்? எதற்காக செல்கிறார்? உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதேபோல் இரவு வேளையில் ரோந்து பணியும், கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்த வேண்டும். இதற்காக ஒவ்வொரு முக்கிய சந்திப்புகளிலும் போலீஸ் அதிகாரி நியமிக்க வேண்டும்' என, உத்தரவிட்டார்.

