/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கூட்டுறவு இளநிலை ஆய்வாளர் தேர்வு
/
கூட்டுறவு இளநிலை ஆய்வாளர் தேர்வு
ADDED : டிச 16, 2024 07:24 AM

புதுச்சேரி: கூட்டுறவு துறை இளநிலை ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வில், 33.31 சதவீதம் பேர் மட்டுமே பங்கேற்றதால் தேர்வறைகள் வெறிச்சோடின.
புதுச்சேரி மாநிலத்தில் கூட்டுறவு துறையில், 38 இளநிலை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு, நேற்று நடந்தது. இந்த தேர்விற்கு புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி - 15; காரைக்கால் - 2; மாகி -1; மற்றும் ஏனாம்; 1, என மொத்தம், 19 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அங்கு காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரை தேர்வு நடந்தது. தேர்வர்கள் காலை, 8:00 மணிக்கு தேர்வு மையங்களுக்கு வர துவங்கினர். அவர்களிடம் ஹால் டிக்கெட், புகைப்படத்துடன் கூடிய அடையாள சான்று ஆகியவை சரிபார்க்கப்பட்டன. தேர்வர்களின் வருகை 'பயோ-மெட்ரிக்' முறையில் பதிவு செய்யப்பட்ட பிறகு தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மைய நுழைவு வாயில்கள், காலை, 9:30 மணிக்கு மூடப்பட்டன. அதற்கு பிறகு வந்த தேர்வர்கள் மையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.
தேர்வு மையத்தில் கைப்பை, மொபைல், புளூ டூத் சாதனங்கள், ஹெட் போன்கள், கால்குலேட்டர்கள், பென்டிரைவ் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை கொண்டு வர தடை விதிக்கப்பட்டது. மொபைல், இன்டர்நெட் சேவைகளை தடுக்க ஜாமர் கருவிகளும், அனைத்து தேர்வு அறைகளிலும் கண்காணிப்பு காமிராக்களும் பொருத்தப்பட்டன.
தேர்வு மையங்களுக்கு முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமார் ஜா, உதவி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஜெய்சங்கர், கண்ணன் ஆகியோர் தேர்வு மையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த தேர்வுக்கு மொத்தம், 6 ஆயிரத்து 542 பேர் விண்ணப்பித்தனர். இதில், 2 ஆயிரத்து 179 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். ஆனால் இந்த தேர்வில், 4 ஆயிரத்து, 363 பேர் பங்கேற்கவில்லை.
அதாவது, 33.31 சதவீதம் பேர் மட்டும் கலந்து கொண்டு தேர்வு எழுதிய நிலையில், 66.69 சதவீதம் பேர், 'ஆப்சென்ட்' ஆகினர். இதனால் பல தேர்வறைகள் வெறிச்சோடி காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

