/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலி மருந்து வழக்கு: 5 பேருக்கு நிபந்தனை ஜாமின்
/
போலி மருந்து வழக்கு: 5 பேருக்கு நிபந்தனை ஜாமின்
ADDED : நவ 26, 2025 07:27 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் தரமற்ற மருந்து சப்ளை முறைகேடு வழக்கில் தொடர்புடைய போலி மருந்து நிறுவன உரிமையாளர் உட்பட 5 பேருக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமுதாய நலவழி மையங்களில் கடந்த 2018-19ம் ஆண்டு தரமற்ற சத்து மருந்து சப்ளை செய்தது தொடர்பாக சுகாதாரத்துறை சிறப்பு பணி அதிகாரி மேரி ஜோஸ்பின் சித்ரா, அளித்த புகாரின் பேரில், கடந்த 2023ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்து மருந்தாளுநர் நடராஜனை கைது செய்தனர்.
மேலும், நடராஜன் தனது மனைவி புனிதா பங்குதாரராக கொண்ட சாய்ராம் ஏஜென்சி, தனது நண்பர் பெயரில் உள்ள பத்மஜோதி ஏஜென்சி என்ற இரு கம்பெனிகளை போலியாக உருவாக்கி, மருந்து, மாத்திரைகளை கொள்முதல் செய்து முறைகேட்டில் ஈடுபட்டதும், இதன் மூலமாக அரசுக்கு ரூ.2.5 கோடி இழப்பு ஏற்படுத்தியதும் தெரியவந்தது.
இதற்கிடையே தரமற்ற மருந்து முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி தலைமையிலான போலீசார் சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநர்கள் ராமன்,67; மோகன்குமார், 65; முன்னாள் துணை இயக்குநர் அல்லிராணி,62; சாய்ராம் ஏஜென்சியின் பங்குதாரர்களான நடராஜன் மனைவி புனிதா, 34; நந்தகுமார், பத்மஜோதி ஏஜென்சி உரிமையாளர் மோகன் ஆகிய 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே, வழக்கில் தொடர்புடைய சாய்ராம் ஏஜென்சியின் உரிமையாளரும், தலைமை செயலக அதிகாரியுமான கணேசன் கார்த்திக், அவரின் தந்தை ஜானகிராமன், தாய் ஜெயந்தி, சகோதரர் வெங்கடேச பிரசன்னா, நடராஜனின் உறவினர் ஏழுமலை உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து தேடி வந்தனர்.
இந்நிலையில், வழக்குப் பதிவு செய்யப்பட்ட 5 பேரும் முன்ஜாமின் கேட்டு, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அதில், நேற்று முன்தினம் மனுதாக்கல் செய்த அனைவரும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் தினமும் ஆஜராகி கையெழுத்துதிடவும், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனை உடன் முன்ஜாமின் வழங்கி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் இயக்குநர்கள் ராமன், மோகன்குமார் ஆகியோர் ஏற்கனவே ஜாமினில் வெளியே வந்துள்ளது குறிப்பிடக்கத்தது.

