தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நாட்டின் பாதுகாப்பு பிரச்னைகள் அரசியலுக்கு அப்பாற்பட்டவை: துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பேச்சு

நாட்டின் பாதுகாப்பு பிரச்னைகள் அரசியலுக்கு அப்பாற்பட்டவை: துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பேச்சு

நாட்டின் பாதுகாப்பு பிரச்னைகள் அரசியலுக்கு அப்பாற்பட்டவை: துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பேச்சு


ADDED : ஜூன் 17, 2025 01:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2025 01:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி; ''தேசிய பாதுகாப்பு பிரச்னைகள் அரசியலுக்கு அப்பாற்பட்டவை,'' என, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பேசினார்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லுாரியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், 'தேசத்தை கட்டியெழுப்புவதில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை' என்ற தலைப்பிலான கருத்தரங்கில், துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:

பஹல்காமில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி, நம் நாட்டிற்கு சவால் விடுத்தனர். உலகின் மிகவும் அமைதியை விரும்பும் நாடு இந்தியா. ஒருபோதும் விரிவாக்கத்தில் ஈடுபடாத நாடு, இந்த கொடூர பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளானது.

'பயங்கரவாதத்திற்கு நாங்கள் சகிப்புத்தன்மையற்றவர்கள்' என்று பிரதமர் தேசத்திற்கு உறுதியளித்து, அதற்கு தகுந்த பதிலடியும் கொடுத்தார்.

ஜெய்ஷ் -இ -முகமது மற்றும் லஷ்கர் -இ -தொய்பாவின் தலைமையகம் துல்லிய தாக்குதலால் பேரழிவு தரும் வகையில் இடிக்கப்பட்டது.

இது ஒரு வித்தியாசமான பாரதம் என்பதற்கான சான்றுகள் முழு உலகிற்கும் உணர்த்தப்பட்டன. போர் ஒரு தீர்வல்ல என்பதையும் பிரதமர் மோடி சூசகமாக கூறி உள்ளார்.

நாம் போரின் சகாப்தத்தில் வாழவில்லை. நாம் உதவி செய்ய வேண்டும். உள்நாட்டு பாதுகாப்புக்கான பொருட்களை உற்பத்தி செய்வது நமக்கு மிகவும் முக்கியம் என்பதை உலகம் உணர்ந்துள்ளது.

எந்தவொரு முன்னேற்றத்திற்கும், அமைதி ஒரு அத்தியாவசிய அம்சமாகும். அமைதி வலிமையான நிலையில் இருந்து வருகிறது. அமைதிக்கான சிறந்த உத்தரவாதம், முதலில் தேசம் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கும் போது வருகிறது.

நாம் நம் தேசியவாதத்தில் நம்பிக்கை கொள்ள வேண்டும். தேசியவாதம் மற்றும் தேசிய பாதுகாப்பு பிரச்னைகள், அரசியல் கட்சிகள் மற்றும் நலன்களுக்கு அப்பாற்பட்டவை.

பிரதமரின் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய நடவடிக்கையாக, அனைத்து கட்சி எம்.பி.,க்கள் குழுவை வெளிநாடுகளுக்கு அனுப்பியதன் வாயிலாக நாட்டிலும், வெளியிலும் சரியான பதிலை தந்துள்ளோம். இதில், அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தன. அதுதான் நமக்கு தேவையான பாரதம்.

தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய வளர்ச்சியில் ஒவ்வொரு நாளும் இது நீண்ட துாரம் செல்லும் என, நான் நம்புகிறேன்.

இவ்வாறு துணை ஜனாதிபதி பேசினார்.

'பீப்' ஒலியால் திக்... திக்...

ஜிப்மர் கல்லுாரியில் கருத்தரங்கில் துணை ஜனாதிபதி பேசிக் கொண்டிருந்த போது, திடீரென அரங்கின் உள்ளே 'பீப்' சத்தம் கேட்டது. வலது பக்க படிக்கட்டு பகுதியில் இருந்து, இந்த சத்தம் சில நிமிடங்கள் ஒலித்துக் கொண்டே இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உரையாற்றிக் கொண்டிருந்த துணை ஜனாதிபதி தன் பேச்சை நிறுத்தி, சத்தம் வந்த திசையை நோக்கி பார்வையை திருப்பினார். பதற்றமடைந்த பாதுகாவலர்கள், பீப் சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினர். சில நிமிடங்களில் பீப் ஒலி அடங்கி அமைதியானதும், துணை ஜனாதிபதி பேச துவங்கினார். 'ரொம்ப நேரம் பேசுகிறேனா; அதற்காகத் தான் இந்த சமிக்ஞையா' என, சிரித்தபடியே கேட்டார். இதனால் பதற்றம் தணிந்து, அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது. விழா அரங்கில், தீ விபத்தை கண்டறிய புகை உணர் சென்சார் அமைக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேனுவல் டைப் சுவிட்சும் உள்ளது. விழாவில் ஏற்றப்பட்ட குத்துவிளக்கில் இருந்து எழுந்த புகையால், தீ எச்சரிக்கைக்காக சமிக்ஞை வந்ததா அல்லது வேறு என்ன காரணம் என, விசாரணை நடக்கிறது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us