/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாகூரில் மாட்டு பொங்கல் கோலாகலம்
/
பாகூரில் மாட்டு பொங்கல் கோலாகலம்
ADDED : ஜன 17, 2026 05:12 AM
பாகூர்: பாகூர் பகுதியில் மாட்டு பொங்கல் பண்டிகை நேற்று விமர்சையாக கொண்டாடப்பட்டது.
தைத் திருநாளின் இரண்டாம் நாள், உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் கால்நடைகளுக்கு, உழவு கருவிகளுக்கும் நன்றி கூறும் விதமாக, மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அதன்படி, பாகூர் பகுதியில் நேற்று மாட்டு பொங்கல் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி, கால்நடைகளை சுத்தம் செய்து, சந்தனம், குங்குமம் இட்டு, ஆவராம் பூ மாலை, சலங்கைகள், கொம்புகளில் வண்ணம் தீட்டியும், பல நிறங்களில் ரிப்பன்கள், பலுான்கள் மூலமாக அலங்கரிக்கப்பட்டன.
வீடுகளில் சர்க்கரை மற்றும் வெண் பொங்கல் செய்யப்பட்டு அவற்றுடன் கரும்பு, பழவகைகள் ஆகியவற்றை, மாடுகளுக்கு படையலிட்டு வழங்கி, நன்றி செலுத்தினர்.
தொடர்ந்து, மாலை 6:00 மணியளவில், பாகூர், சேலியமேடு, கிருமாம்பாக்கம், குருவிநத்தம், சோரியாங்குப்பம், பரிக்கல்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் மஞ்சு விரட்டும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், மாட்டு வண்டிகள், டிராக்டர், கார், பைக் என வாகனங்களில், குழந்தைகள், சிறுவர்கள், பொது மக்கள் ஊர்வலம் சென்று பொங்கலோ, பொங்கல், மாட்டு பொங்கல் என கொண்டாடி மகிழ்ந்தனர்.

