/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'குற்றவாளிகளுக்கு ஒரு வாரத்திற்குள் தண்டனை'
/
'குற்றவாளிகளுக்கு ஒரு வாரத்திற்குள் தண்டனை'
ADDED : மார் 07, 2024 01:14 AM
புதுச்சேரி : சிறுமி கொலை வழக்கில், விரைவு சிறப்பு நீதிமன்றம் உடனடியாக அமைத்து குற்றவாளிகளுக்கு ஒரு வாரத்திற்குள் தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கவர்னர் தமிழிசை கூறினார்.
சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அவர் கூறியதாவது: இச்சம்பவத்தால் நிலைகுலைந்து போயுள்ளேன். இங்குள்ள பெண்களின் மனநிலைதான் ஒரு தாயாக எனக்கும் உள்ளது. விரைவு சிறப்பு நீதிமன்றம் உடனடியாக அமைத்து, ஒரு வாரத்திற்குள் குற்றவாளிகளை தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்றார்கள். அதற்கு நான் உடன்படுகிறேன்.
போராட்டம் செய்யும் மக்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன். இது போன்ற நிகழ்வுகள் இனிமேல் நடக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
மாநிலத்தில் போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்க தீவிரமாக பணியாற்றி வருகிறோம். தமிழகத்தில் போதைப் பொருளை பழக்கத்தில் வைத்திருந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு துணைபுரியும் சிலர் புதுச்சேரியில் இருப்பதாக தகவல் வந்திருக்கிறது.
அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவர்.
இது, போதை பயன்பாட்டினால் மட்டும் நடந்த நிகழ்வாக இல்லாமல் பாதை மாறிய இளைஞர்களின் செயலாலும் நடைபெற்று இருக்கிறது. இது சமுதாயத்தின் அவலம். கொலை சம்பவத்தில் இரண்டு மிருகங்கள் பிடிபட்டுள்ளது. அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அவர்களுக்கு துணையாக யாரேனும் இருந்தார்களா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. அவர்களுக்கும் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும்.
போதைப் பொருள் புழக்கத்திற்கு காரணமாக இருப்பவர்கள் சிலர் அரசியல் பின்புலத்திலும் இருக்கிறார்கள். நிச்சயமாக அனைவரும் பிடிபடுவர். புதுச்சேரியின் எல்லைகள் கண்காணிக்கப்படும்.
இவ்வாறு கவர்னர் கூறினார்.

