/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு துறைகளில் முக்கிய பதவிகள் காலியாக உள்ளதால்... நெருக்கடி; கூடுதல் பணிச்சுமையால் நிர்வாகம் ஸ்தம்பிக்கும் அவலம்
/
அரசு துறைகளில் முக்கிய பதவிகள் காலியாக உள்ளதால்... நெருக்கடி; கூடுதல் பணிச்சுமையால் நிர்வாகம் ஸ்தம்பிக்கும் அவலம்
அரசு துறைகளில் முக்கிய பதவிகள் காலியாக உள்ளதால்... நெருக்கடி; கூடுதல் பணிச்சுமையால் நிர்வாகம் ஸ்தம்பிக்கும் அவலம்
அரசு துறைகளில் முக்கிய பதவிகள் காலியாக உள்ளதால்... நெருக்கடி; கூடுதல் பணிச்சுமையால் நிர்வாகம் ஸ்தம்பிக்கும் அவலம்
ADDED : ஆக 19, 2025 07:26 AM

புதுச்சேரி: தலைமை செயலகம் முதல் அரசு துறைகள் வரை முக்கிய பதவிகள் அனைத்தும் பொறுப்பு அடிப்படையில்கவனிக்கப்பட்டு வருவதால் நிர்வாக பணிகள் தொய்வு அடைந்துள்ளதுடன், அதிகாரிகளுக்கும் கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி அரசில் 54 அரசு துறைகள் உள்ளன. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், பி.சி.எஸ்., அதிகாரிகள் எனப்படும் புதுச்சேரி குடிமை பணி அதிகாரிகள் இத்துறைகளை கவனித்து வருகின்றனர். அரசின் ஆணிவேராக உள்ள அரசு துறைகள் அனைத்தும் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது பொறுப்பு அடிப்படையில் கவனிக்கப்பட்டு வருவதால் நிர்வாக பணிகள் தொய்வு அடைந்துள்ளது. அதிகாரிகளுக்கும் கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.
உதாரணத்திற்கு, தலைமை செயலகத்தில் 6 சார்பு செயலர்கள் அனைத்து அரசு துறைகளின் நிர்வாக கோப்புகளை கவனித்து வந்தனர். இவர்களில் 3 சார்பு செயலர்கள் அண்மையில் ஓய்வு பெற்றுவிட்டனர். மீதமுள்ள 3 சார்பு செயலர்கள் தற்போது 40 துறைகளை கவனித்து வருகின்றனர். அந்த அளவிற்கு தலைமை செயலகத்தில் சார்பு செயலர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.
அரசு துறைகளிலும் இதே நிலைதான். உயர் கல்வி துறை இயக்குநர் தான், பள்ளி கல்வி துறை கூடுதலாக கவனித்து வருகிறார். வேளாண் துறை, வணிகவரி, விளையாட்டு, அரசு அச்சகம், முப்படை நலத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளிலும் இதே நிலைதான். பிற துறை இயக்குநர்கள் கூடுதலாக பொறுப்புகளை கவனித்து வருகின்றனர்.
இதேபோல் வேளாண் துறையில் நிர்வாக துணை இயக்குநர், போக்குவரத்து துறையில் துணை போக்குவரத்து ஆணையர், உயர் கல்வி துறையில் சிறப்பு பணி அதிகாரி, பிப்டிக் மேலாண் இயக்குனர் பதவிகளும் பொறுப்பு அடிப்படையில் கவனிக்கப்பட்டு வருகின்றது.
கல்வி துறை, வேளாண் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் முழு நேர இயக்குநர் இருந்தால் கூட சமாளிக்க முடியாது. அந்த அளவிற்கு 24 நேரமும் பணிகள் இருக்கும். இத்துறைகளை பொறுப்புகள் அடிப்படையில் கவனிப்பதால் நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அரசு துறை காலியிடங்களை நிரப்ப வழியில்லாமல் இல்லை. கண்காணிப்பாளர்கள், தாசில்தார்கள் என 11 பேர் பி.சி.எஸ்., அதிகாரிகள் பதவிக்கு தகுதியாக காத்திருக்கின்றனர். இவர்களுக்கு பி.சி.எஸ்., அதிகாரிகளாக பதவி அளித்தால், துறை இயக்குநர் உள்ளிட்ட முக்கிய காலியிடங்களை நிரப்பிட முடியும். அதன் பிறகு சீனியர் அதிகாரிகளுக்கு சார்பு செயலர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை அளித்து அனைத்து அரசு துறை பதவிகளை நிரப்பிட திறம்பட கையாள வழி இருக்கின்றது.
சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்டது. மக்களுக்கு நல்லது செய்ய ஓரிரு மாதங்களே உள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் செய்யாமல் விட்டதை செய்ய அரசுக்கு குறுகிய காலமே உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் முக்கிய பதவிகள் அனைத்தும் காலியாக இருந்தால் அரசு நினைத்ததை குறுகிய காலத்திற்குள் எப்படி செய்ய முடியும் என எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமின்றி, ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்களே புலம்பி வருகின்றனர். எனவே, அரசு துறைகளில் காலியாக உள்ள அனைத்து பதவிகளையும் விரைந்து நிரப்ப முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.