மட்டன் பிரியாணியில் வண்டு: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
மட்டன் பிரியாணியில் வண்டு: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
UPDATED : ஜூலை 15, 2026 06:13 PM
ADDED : ஜூலை 15, 2026 06:01 PM
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே ஓட்டலில் சாப்பிட்ட மட்டன் பிரியாணியில் வண்டு கிடந்த விவகாரத்தில் உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை - திருச்சி பைபாஸ் சாலையில் விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டில் பிரபல தனியார் அசைவ உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்த ஆனந்த், 35; என்பவர் தனது குழந்தைகளுடன் சென்று மட்டன் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டனர். அப்போது, பிரியாணியில் வண்டு மற்றும் பூச்சி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து ஓட்டல் ஊழியர்களிடம் கேட்டபோது உரிய விளக்கம் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. ஓட்டலில் பிரியாணி சாப்பிட்ட அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். பிரியாணியில் வண்டு, பூச்சி கிடந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியது.
தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இது போன்ற உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
