/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி அருகே பெஞ்சல் புயல் இன்று பிற்பகல்... கரையை கடக்கிறது; சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டும்
/
புதுச்சேரி அருகே பெஞ்சல் புயல் இன்று பிற்பகல்... கரையை கடக்கிறது; சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டும்
புதுச்சேரி அருகே பெஞ்சல் புயல் இன்று பிற்பகல்... கரையை கடக்கிறது; சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டும்
புதுச்சேரி அருகே பெஞ்சல் புயல் இன்று பிற்பகல்... கரையை கடக்கிறது; சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டும்
ADDED : நவ 30, 2024 05:09 AM

புதுச்சேரி: புதுச்சேரி அருகே இன்று புயல் சின்னம் கரையை கடப்பதையொட்டி, முன்னெச்சரிக்கை பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெஞ்சல் புயலாக இன்று 30ம் தேதி பிற்பகல் புதுச்சேரி - மகாபலிபுரம் இடையே கரையை கடக்கிறது. இதனால் புதுச்சேரிக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சீறிய அலைகள்:
புயல் சின்னம் காரணமாக புதுச்சேரி கடல் பகுதிகளில் அலையின் சீற்றம் அதிகமாக இருந்தது. 5 அடிக்கு மேல் அலைகள் எழும்பின. மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.
ஆழ்கடல் விசைப்படகுகள் தேங்காய்திட்டு துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 18 மீனவ கிராமங்களிலும் உள்ள படகுகள் கரையேற்றப்பட்டுள்ளன.
வெறிச்சாடிய கடற்கரை சாலை
புயல் எச்சரிக்கை காரணமாக பாதுகாப்பு கருதி, கடற்கரை சாலை மூடப்பட்டுள்ளது. கடற்கரையை சுற்றி பார்க்க வந்த சுற்றுலாப் பயணிகளை போலீசார் திருப்பி அனுப்பினர். இதேபோல் பாண்டி மெரினா சாலையையும் போலீசார் மூடினர். சுண்ணாம்பாறு, ஊசுட்டேரி என அனைத்து பொழுதுபோக்கு இடங்களும் மூடப்பட்டுள்ளன.
எச்சரிக்கை எஸ்.எம்.எஸ்.,
புயல் 90 கி.மீ., வேகத்தில் கரையை கடக்க கூடும் என்பதால் அதிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய பொருட்களுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என, புதுச்சேரி அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள அனைத்து பொதுமக்களின் மொபைல் எண்ணிற்கும் ஒரே நேரத்தில் எஸ்.எம்.எஸ்., அனுப்ப பேரிடர் மேலாண்மை துறை திட்டமிட்டுள்ளது. புதுச்சேரிக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட உள்ளது.
13 ஆயிரம் பேருக்கு உணவு:
புதுச்சேரி பிராந்தியத்தில் 208 முகாம்கள் உள்ளபோதிலும் 121 முகாம்கள் பொதுமக்கள் தங்க திறந்துவிடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் முகாமில் பாதுகாப்பாக தங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் 13 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.
400 பேர்
புயல் காரணமாக பல்வேறு துறைகள் அடங்கிய பேரிடர் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இக்குழுவில் இடம் பெற்றுள்ள 400 பேர் நேற்று முதல் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளில் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். இப்பணிகளை முதல்வர் ரங்கசாமி, கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு செய்து, ஆலோசனை வழங்கினர்.
நேற்று காலையில் லேசாக வெய்யில் தலைகாட்டினாலும், மாலையில் கடும் குளிருடன் காற்று வீசியது.

