தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை: வேலை நாளாக 21ம் தேதி அறிவிப்பு
தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை: வேலை நாளாக 21ம் தேதி அறிவிப்பு
UPDATED : நவ 05, 2026 11:59 PM
ADDED : நவ 04, 2026 09:20 PM
புதுச்சேரி: தீபாவளிப் பண்டிகைக்கு மறுநாளான 9ம் தேதி புதுச்சேரியில் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால், அதன் மறுநாளான 9ம் தேதி தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. இதேபோல் புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் 9ம் தேதி விடுமுறை விடப்படும் என, முதல்வர் ரங்கசாமி அறிவித்து இருந்தார்.
அதைத் தொடர்ந்து, புதுச்சேரி அரசின் உள்துறை சார்பில் கவர்னர் ஒப்புதலுடன் அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி, புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் ஆகிய யூனியன் பிரதேசத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இயங்கும் அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த நிறுவனங்கள், பொதுத்துறை வாரியங்கள், பள்ளிகள், கல்லுாரிகள், தொழில்முறை கல்வி நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், வரும் 21ம் தேதி சனிக்கிழமை அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாகச் செயல்படும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
