/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முக்கிய சாலைகளை ஒரு வழி பாதையாக மாற்ற முடிவு
/
முக்கிய சாலைகளை ஒரு வழி பாதையாக மாற்ற முடிவு
ADDED : ஜன 13, 2025 03:56 AM
புதுச்சேரி: புதுச்சேரி நகரப்பகுதி போக்குவரத்து நெரிசலால் திணறி வருவதால், முக்கிய சாலைகளை ஒரு வழி பாதையாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகள் வருகை மற்றும் வாகன பெருக்கத்தால், நகரப்பகுதி திணறி வருகிறது.
இந்நிலையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள முக்கிய சாலைகளை ஒரு வழி பாதையாக மாற்ற போக்குவரத்து போலீசார் முடிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே நேரு வீதி, ரங்கப்பிள்ளை வீதி மற்றும் கொசக்கடை வீதி, ஒரு வழி பாதையாக உள்ளது. தற்போது கூடுதலாக டூமாஸ் வீதி, சுய்ப்ரென் வீதி, மிஷன் வீதி மற்றும் பாரதி வீதி ஆகிய வழிகளை ஒரு வழி பாதையாக மாற்றி, வடக்கில் இருந்து தெற்கு வழியாக வாகனங்கள் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
இதேபோல ரோமன் ரோலண்ட் வீதி, மணக்குள விநாயகர் கோவில் வீதி, காந்தி வீதி, சின்ன சுப்பராயப்பிள்ளை வீதி ஆகியவற்றை ஒரு வழி பாதையாக மாற்றி, தெற்கில் இருந்து வடக்கு வழியாகவும் மற்றும் புஸ்சி வீதியில் இருந்து கடற்கரை சாலை மற்றும் அண்ணா சாலை மேற்கில் இருந்து கிழக்கு வழியாகவும் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கனரக மற்றும் வர்த்தக நிறுவன வாகனங்கள், நகரப்பகுதியான புல்வர்டு பகுதிக்குள் இரவு 10:00 மணி முதல் காலை 6:00 மணி வரை செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஒயிட் டவுனுக்கு வரும் சுற்றுலா பயணிகள், வாகனங்களை நிறுத்த மல்ட்டி லெவல் பார்க்கிங் அமைக்க, 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி - கடலுார் சாலை; புதுச்சேரி - விழுப்புரம் சாலை; புதுச்சேரி - சென்னை இ.சி.ஆரில் உள்ள 150 இடங்களில் சந்திப்புகளை மூடக்கோரி பொதுப்பணித்துறைக்கு கோப்பு அனுப்ப போக்குவரத்து போலீசார் முடிவு செய்துள்ளனர்.