/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி சிறுமி கொலைக்கு நீதி கேட்டு பொதுமக்கள் 9 இடங்களில் போராட்டம் கடலில் இறங்கி போராட்டம் போலீசார் தடியடி நடத்தி கலைப்பு
/
புதுச்சேரி சிறுமி கொலைக்கு நீதி கேட்டு பொதுமக்கள் 9 இடங்களில் போராட்டம் கடலில் இறங்கி போராட்டம் போலீசார் தடியடி நடத்தி கலைப்பு
புதுச்சேரி சிறுமி கொலைக்கு நீதி கேட்டு பொதுமக்கள் 9 இடங்களில் போராட்டம் கடலில் இறங்கி போராட்டம் போலீசார் தடியடி நடத்தி கலைப்பு
புதுச்சேரி சிறுமி கொலைக்கு நீதி கேட்டு பொதுமக்கள் 9 இடங்களில் போராட்டம் கடலில் இறங்கி போராட்டம் போலீசார் தடியடி நடத்தி கலைப்பு
ADDED : மார் 07, 2024 01:36 AM

புதுச்சேரி : சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பல்வேறு இடங்களில் நடந்த போராட்டத்தால் புதுச்சேரி நகர பகுதி ஸ்தம்பித்தது. மறியலில் ஈடுப்பட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
புதுச்சேரியைச் சேர்ந்த சிறுமியை, இருவர் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து, கை கால்களை கட்டி கழிவுநீர் வாய்க்காலில் வீசிய கொடூர சம்பவம் நடந்தது. இச்சம்பவத்தில் போலீசாரின் மெத்தன போக்கு மற்றும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என, சிறுமியின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு புதுச்சேரி முழுதும் நேற்று பல்வேறு இடங்களில் மறியல் மற்றும் போராட்டம் நடந்தது.
இந்திய மாதர் சங்கம் சார்பில் நேற்று காலை 10:00 மணிக்கு முத்தியால்பேட்டை மணி கூண்டு அருகே மறியல் போராட்டம் நடந்தது. கஞ்சா போதை கும்பலுக்கு எதிராக கோஷம் எழுப்பி கண்டனம் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து மதியம் 2:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, லாஸ்பேட்டை மோதிலால் நேரு பாலிடெக்னிக் மற்றும் அரசு கலை அறிவியல் கல்லுாரிகளைச் சேர்ந்த கல்லுாரி மாணவ மாணவிகள் அதே இடத்தில் மறியலில் ஈடுப்பட்டனர்.
மதியம் 2:00 மணிக்கு முருகா தியேட்டர் சிக்னலில், 5 சாலைகளை மறித்து கல்லுாரி மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிமேடு போலீசார் மறியலில் ஈடுப்பட்டவர்களை விரட்டி கலைத்தனர்.
சில சமூக அமைப்புகள் மற்றும் கல்லுாரி மாணவர்கள் நேற்று காலை 11:00 மணிக்கு, கடற்கரைச் சாலை காந்தி சிலை பின்புறம் கடலில் இறங்கி சிறுமியின் கொலைக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பெரியக்கடை இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை வெளியேற்றினர். அரசு சட்டக்கல்லுாரி மாணவர்கள் காலாப்பட்டு இ.சி.ஆர். சாலையில் நேற்று மதியம் 12:00 மணிக்கு மறியலில் ஈடுப்பட்டனர்.
மறைமலையடிகள் சாலை, வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை அருகே நேற்று மதியம் 3:30 மணிக்கு மறியல் போராட்டம் நடந்தது. முன்னதாக ஏம்பலம் நான்கு முனை சந்தில் காலை 11:00 மணிக்கு பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினர். வானுார் மற்றும் கோட்டக்குப்பத்தில் இருந்து பொதுமக்கள் நீதி கேட்டு பைக் பேரணி நடத்தினர். அஜந்தா சிக்னல் சந்திப்பில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் தூக்கு கயிறுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தடியடி
இ.சி.ஆர்., கருவடிக்குப்பம் சிவாஜி சிலை அருகே மதியம் 3:00 மணிக்கு, பொது மக்கள் மற்றும் கல்லுாரி மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுப்பட்டவர்களை அப்புறப்படுத்த முயற்சித்தபோது, போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் போலீசார் தடியடி நடத்தி மறியல் போராட்டக்காரர்களை விரட்டி அடித்தனர். அதைத் தொடர்ந்து, 45 அடி சாலை, ஜிவா நகர் சந்திப்பு அருகே நேற்று மாலை 5:00 மணிக்கு மறியல் போராட்டம் நடந்தது.
புதுச்சேரியில் நேற்று சிறுமியின் கொலைக்கு நீதி கேட்டு 9 இடங்களில் பொதுமக்கள் தாங்களாக முன் வந்து சாலை மறியலும், பைக் பேரணி நடத்தி தங்களின் ஆதங்கங்களை கொட்டி தீர்த்தனர்.
தொடர் போராட்டத்தால் புதுச்சேரி ஸ்தம்பித்து அசாதாரண நிலை ஏற்பட்டது.

