டெங்குவால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு: பள்ளி மாணவி உட்பட மூன்று பேர் பலி
டெங்குவால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு: பள்ளி மாணவி உட்பட மூன்று பேர் பலி
ADDED : நவ 24, 2026 08:24 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வரும் நிலையில், நேற்று தனியார் பள்ளி மாணவி ஒருவர் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், புதுச்சேரியில் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இதுவரை 1,300 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே இருவர் இறந்த நிலையில், நேற்று நோணாங்குப்பத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவி டெங்கு காய்ச்சலுக்கு பலியானார். இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பாண்டில் இதுவரை 3 பேர் இறந்துள்ளனர். இதையடுத்து, சுகாதாரத் துறை டெங்கு ஒழிப்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.
வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதுடன், சுற்றுப்புறத்தைத் துய்மையாகப் பராமரிப்பதும் அவசியமாகும்.
டெங்கு என்பது ஏடீஸ் ஈஜிப்டை வகை கொசுக்கள் மூலம் பரவும் வைரஸ் நோயாகும். இந்த வகை கொசுக்கள் சுத்தமான நீர் தேங்கியுள்ள இடங்களில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன.
டெங்கு காய்ச்சல் ஆரம்பத்தில் சாதாரண காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் காணப்படும்.
ஆனால், அடுத்தகட்டமாகக் கடுமையான தலைவலி, கண்களுக்குப் பின்புறம் தாங்க முடியாத வலி, மூட்டுகளை முறிப்பது போன்ற வலி ஆகியவை ஏற்படலாம்.
டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கையைப் பாதிப்பதுடன், சிலருக்கு வெளிப்புறக் காயம் ஏதுமின்றியே ரத்தக் கசிவு ஏற்படவும் காரணமாகிறது.
டெங்கு ரத்தக் கசிவு காய்ச்சல் மற்றும் டெங்கு ஷாக் சிண்ட்ரோம் ஆகிய இரு நிலைகளும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை.
டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் வைரசுக்கு எனத் தனிப்பட்ட நேரடி சிகிச்சை கிடையாது. நோயாளியின் அறிகுறிகள் மற்றும் உடல்நிலைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது.
டெங்கு சில நேரங்களில் காய்ச்சல் குறைந்த பிறகே நோயின் தீவிரம் அதிகரிக்கலாம். உடலில் ஏற்படும் பாதிப்புகளை உணராமல் அலட்சியமாக இருப்பதும், உரிய நேரத்தில் சிகிச்சை பெறாமல் காலதாமதம் செய்வதும் உயிரிழப்புக்கு வழிவகுக்கலாம்.
எனவே, காய்ச்சல் குறைந்தாலும் மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றுவது அவசியம். டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடீஸ் வகைக் கொசுக்கள் பெரும்பாலும் பகல் நேரத்தில்தான் மனிதர்களைக் கடிக்கின்றன.
பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால், அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள் அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகி மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.
