ADDED : மார் 26, 2026 08:41 PM
புதுச்சேரி: இந்தியத் தேர்தல் ஆணையத்தின் துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் யெத்துாரு, புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான பணிகளை ஆய்வு செய்தார்.
புதுச்சேரியில் வரும் 9ம் தேதி சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் நியாயமாகவும், வெளிப்படை தன்மையுடன் நடைபெறுவதற்காக பல்வேறு கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் யெத்துாரு நேற்று புதுச்சேரியில் அமைக்கப்பட்ட பல்வேறு தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் செயல்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் ஒருங்கிணைப்பு அதிகாரி, கட்டுப்பாட்டு அறையில் மேற்கொள்ளப்படும் நிகழ்நேரச் செயல்பாடுகள், பணிப்பாய்வு வழிமுறைகள் மற்றும் பதிலளிப்பு நெறிமுறைகள் குறித்துத் துணைத் தேர்தல் ஆணையருக்கும், மூத்த அதிகாரிகளுக்கும் விளக்கமளித்தார்.
மேலும், டிஜிட்டல் தளங்கள் மற்றும் களக்கண்காணிப்பு மூலம் பெறப்படும் புகார்கள் மீது விரைவான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்வதற்காக, பல்வேறு குழுக்கள் மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த முயற்சிகளையும் எடுத்துரைத்தனர்.
ஆய்வின்போது, தலைமைத் தேர்தல் அதிகாரி ஜவகர், மாவட்டத் தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் ஆகியோர் உடனிருந்தனர்.
