ADDED : ஏப் 08, 2026 07:19 AM
புதுச்சேரி: ஓட்டுச்சாவடி பணிக்கு 4, 116 அரசு துறை ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுள்ளனர் என, மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.
அவர், கூறியதாவது:
புதுச்சேரியில் நாளை (9ம் தேதி) சட்டபை தேர்தல் நடக்கிறது. தேர்தல் பாதுகாப்பாக நடத்திட தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், புதுச்சேரியில் 78 பறக்கும் படைகள் 40 நிலையான கண்காணிப்புக்குழுக்கள், 50 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஓட்டுச்சாவடி பணிக்கு 4,116 அரசு துறை ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவர். பதற்றமான ஓட்டுச்சாவடிகள் என கண்டறியப்பட்ட 137 இடங்களில் 155 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இன்று காலை முதல் அனுப்பப்படுகிறது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலான நிலையிலிருந்து தற்போது வரை ரூ. 69.99 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ. 61.38 லட்சம் மதுபானங்கள், ரூ.6.71 கோடி தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதலானது. ரூ. 20 லட்சம் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தேர்தல் நடத்தை விதி மீறியதாக 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. கலால் விதி மீறியதாக 7 வழக்குகள் பதிவாகியுள்ளது. சிவிஜில் மூலம் 62 புகார்களும், 1950 மூலம் 970 புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட 6 அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் மேலும் 5 பேர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு அந்தந்த துறைகளுக்கு பரிந்துரை செய்துள்ளோம். இவர்கள் கல்வித்துறை, பொதுப்பணித்துறை, மின்துறை, பாண்லே உள்ளிட்ட துறைகளை சேர்ந்தவர்கள்.
ஓட்டுப்பதிவு நாளான வரும் 9ம் தேதி புதுச்சேரியில் வாழும் அனைவருக்கும், தமிழகம், கேரளத்தில் வாழும் புதுச்சேரி வாக்காளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.
பார்வை குறைபாடு உள்ள வாக்காளர்களுக்கு பிரெய்லி வாக்குச்சீட்டு அனைத்து வாக்குச்சாவடியிலும் தயாராக வைக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு பிரசாரம் ஊர்வலம் நடத்த 1383 அனுமதி தரப்பட்டன. ஓட்டுச்சாவடிக்கு 100 மீட்டர் தொலைவில், தேர்தல் சாவடிகள் அமைக்க 42 வேட்பாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 6 மணி முதல் தேர்தல் பிரசாரம், தேர்தல் கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 வரை நடக்கும்' என்றார்.
எஸ்.எஸ்.பி., கலைவாணன் கூறுகையில், 'புதுச்சேரியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் போதிய நடவடிக்கை எடுத்துள்ளோம். துணை ராணுவப்படை, போலீசார் பணியில் இருப்பார்கள்.
ஓட்டுப்பதிவு தினத்தில் 3 ஆயிரம் போலீசார் , துணை ராணுவப்படையினர் கர்நாடக போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவர். போலீஸ் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும். ஓட்டுச்சாவடிகளுக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லும்போது போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்டாங்க் ரூமில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பணம் கொடுத்ததாக இதுவரை 7 வழக்குகள், பிரசார விதிமீறல் 4 வழக்குகள் உட்பட 38 வழக்குகள் பதிவானது' என்றார்.
