/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை தனியார் பள்ளி சூறை; ஆசிரியருக்கு தர்ம அடி
/
ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை தனியார் பள்ளி சூறை; ஆசிரியருக்கு தர்ம அடி
ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை தனியார் பள்ளி சூறை; ஆசிரியருக்கு தர்ம அடி
ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை தனியார் பள்ளி சூறை; ஆசிரியருக்கு தர்ம அடி
ADDED : பிப் 15, 2025 04:55 AM

அரியாங்குப்பம் : தவளக்குப்பத்தில் ஒன்றாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை கண்டித்து பள்ளியை பொதுமக்கள் சூறையாடி, ஆசிரியரை விரட்டி விரட்டி அடித்தனர். புதுச்சேரி - கடலுார் சாலையில் நள்ளிரவு வரை மறியல் போராட்டம் நடந்தது. பள்ளியை மூட கலெக்டர் உத்தரவிட்டார்.
புதுச்சேரி, தவளக்குப்பம், நல்லவாடு சாலை, தானாம்பாளையத்தில் செயின்ட் ஜோசப் தனியார் ஆங்கில மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இங்கு, ஒன்றாம் வகுப்பு பயிலும் 6 வயது சிறுமியிடம் அப்பள்ளி ஆசிரியர் மணிகண்டன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து அச்சிறுமி தனது பெற்றோரிடம் கூறினார். பெற்றோர் கிராம மக்களுடன் சிறுமியை அழைத்து வந்து பள்ளியில் விசாரித்தனர். அப்போது, அச்சிறுமி தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்ட ஆசிரியர் மணிகண்டனை அடையாளம் காட்டினார். ஆனால் பள்ளி நிர்வாகம் சரிவர பதில் கூறவில்லை. இதனால் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பள்ளியை நேற்று மாலை முற்றுகையிட்டனர்.
ஆசிரியர் மணிகண்டனை, சப் இன்ஸ்பெக்டர் சண்முகசத்தியா தலைமையிலான போலீசார் கைது செய்து அழைத்து செல்ல முயன்றபோது, அவரை பொதுமக்கள் விரட்டி விரட்டி தாக்கினர். பொதுமக்களிடம் இருந்து மணிகண்டனை மீட்டு போலீசார் அழைத்து சென்றனர். அப்போது, சிறுமியின் பெற்றோர,் உறவினர்களை போலீசார் தாக்கினர்.
ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் தவளக்குப்பம் நான்கு முனை சந்திப்பில் குற்றவாளிக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதா கூறியும், ஆசிரியர் மீது வழக்கு பதிந்து கைது செய்ய கோரி மாலை 5:00 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர். எஸ்.பி. பக்தவச்சலம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதற்குள் மற்றொரு தரப்பினர் பள்ளிக்குள் புகுந்து அலுவலகம், வகுப்பறைகளை அடித்து நொறுக்கினர். நிர்வாக அறையில் இருந்து கம்ப்யூட்டர், சேர், டேபிள், கண்ணாடிகளை அடித்து சூறையாடினர்.
இதற்கிடையே கடலுார் - புதுச்சேரி சாலையில் மாலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணியை தாண்டியும் மறியல் போராட்டம் நடந்தது. இரு புறத்திலும் 5 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போராட்டக்காரர்களுடன் கலெக்டர் குலோத்துங்கன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கலெக்டர் குலோத்துங்கன் கூறுகையில், குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தகுந்த தண்டனை பெற்று தரப்படும். பள்ளி நிர்வாகம் மீதும் விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளியை உடனடியாக மூடி சீல் வைக்கப்படும். இதுபோன்ற சம்பவம் புதுச்சேரியில் நடக்காமல் இருக்க அரசு சார்பில் அனைத்து விதமான நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி நிர்வாகம் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என, கூறினார்.
டி.ஐ.ஜி., சத்யசுந்தரம் கூறுகையில், 'பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பெற்றோர் இதுவரை புகார் தரவில்லை. புகார் தரவில்லை என்றால் போலீசார் முன் வந்து சட்ட நடவடிக்கை எடுக்கும். போலீசார் சிலர் தவறாக நடந்துள்ளதாக கூறியுள்ளனர். அது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
இதனிடையே ஆசிரியர் மணிகண்டன் மீது போலீசார் வழக்குப் பதிந்து, அவரை, கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
----
பா.ஜ., நிர்வாகி பார் சூறை
தனியார் பள்ளி நடத்திய நிர்வாகி, பா.ஜ., கட்சியில் விவசாயி அணியில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். பள்ளி நடத்தும் அவர், தவளக்குப்பம் மெயின் ரோட்டில், மது பார் நடத்தி வருகிறார். பள்ளியை சூறையாடிய மக்கள், மதுமான பாருக்குள் புகுந்து மது பாட்டில்களை உடைத்து, சூறையாடினர்.
தவளக்குப்பம் பகுதி கலவரமாக மாறியதை அடுத்து, பள்ளி மற்றும், தவளக்குப்பம் முக்கிய இடங்களில் நேற்று இரவு போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.