'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி: எதிர்காலத்தில் 'குவாண்டம் கம்ப்யூட்டிங்' ஆதிக்கம் செலுத்தும் அமிர்தா விஷ்வ வித்யாபீடம் பேராசிரியர் எஸ்.சவுந்தரராஜன் பேச்சு
'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி: எதிர்காலத்தில் 'குவாண்டம் கம்ப்யூட்டிங்' ஆதிக்கம் செலுத்தும் அமிர்தா விஷ்வ வித்யாபீடம் பேராசிரியர் எஸ்.சவுந்தரராஜன் பேச்சு
ADDED : ஏப் 04, 2026 08:23 PM

புதுச்சேரி: குவாண்டம் கம்ப்யூட்டிங்கிற்கு இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் சிவப்பு கம்பள வரவேற்பு எதிர்காலத்தில் இருக்க போகிறது என, அமிர்தா விஷ்வ வித்யாபீடம் பேராசிரியர் எஸ். சவுந்தரராஜன் பேசினார்.
புதுச்சேரி, மரப்பாலத்தில் உள்ள சுகன்யா கன்வென்சன் சென்டரில் நேற்ற துவங்கிய 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியில், 'ஐ.டி., கம்ப்யூட்டர் சயின்ஸ், ஏ.ஐ., மெஷின் லேர்னிங், டேட்டா சயின்ஸ்' படிப்புகள் குறித்து அமிர்தா விஷ்வ வித்யாபீடம் பேராசிரியர் எஸ். சவுந்தரராஜன் பேசியதாவது:
உலகம் வேகமாக மாறிக் கொண்டே இருக்கிறது. அதற்கேற்ப தினமும் புதுப்புது படிப்புகளும் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இன்றைய யுகம் ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு யுகமாக மாறி வருகிறது. சாட்-ஜி.பி.டி., அனைவரும் பயன்படுத்தி வருகிறோம். அது நமது நண்பனாகிவிட்டது. எதை கேட்டாலும் கொடுக்கிறது.
அதையும் ஒன்று தாண்ட உள்ளது. அது தான் 'குவாண்டம் கம்ப்யூட்டிங்'. குவாண்டம் கம்ப்யூட்டிங் என்பது குவாண்டம் இயற்பியல் கோட்பாடுகளை பயன்படுத்தி, மிகக் கடினமான சிக்கல்களை சூப்பர் கம்ப்யூட்டர்களை விட அதிவேகமாகத் தீர்க்கும் புதிய கணினி தொழில்நுட்பமாகும்.
இது பாரம்பரிய 'பிட்'களுக்கு பதிலாக, குவிட்களை பயன்படுத்தி ஒரே நேரத்தில் பல நிலைகளில் செயல்படுகிறது. அதனால் குவாண்டம் தொழில்நுட்பம் உலக நாடுகளை கவனம் ஈர்த்துள்ளன. இந்தியாவும் குவாண்டம் பக்கம் திரும்பியுள்ளது. நம் நாட்டில் 6,300 கோடிக்கு குவாண்டம் கம்ப்யூட்டிங்கில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றால், அதனுடைய வேலைவாய்ப்பு எப்படி இருக்கும் என்று கணக்குபோட்டு பாருங்கள்...
இந்த குவாண்டம் கம்ப்யூட்டிங்கிற்கு இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் சிவப்பு கம்பள வரவேற்பு எதிர்காலத்தில் இருக்க போகிறது. 2030ல் இந்த குவாண்டம் ஆதிக்கம் செலுத்தும். எல்லா படிப்புகளுக்கும் வேலை இருக்கிறது. ஆனால் இன்றைக்கு கம்ப்யூட்டர் படிப்புகளை படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கதவுகள் திறந்து வைத்திருக்கிறது. எனவே கம்ப்யூட்டர் வேலைகளை எதிர்ப்பார்ப்பவர்கள் பி.டெக்., - சி.எஸ்.இ., எடுத்து படிக்கலாம். அது கிடைக்காவிட்டால் பி.டெக்., ஏ.ஐ., சைபர் செக்யூரிட்டி, டேட்டா சயின்ஸ் எடுத்து படித்து கணினி வேலைகளை எதிர்நோக்கலாம். எதுவாக இருந்தாலும் இன்றைக்கு 'பிளேஸ்மெண்ட்' மாறிவிட்டது. முன்பெல்லாம் 5 ஆயிரம் பேரை கூட வேலைக்கு எடுப்பார்கள். இன்றைக்கு ஒன்றிரண்டு பேரை மட்டும் வேலைக்கு எடுக்கின்றனர். அதுவும் 'இன்டர்ன்ஷிப்'வேலைக்கு. 'சாப்ட் ஸ்கில்' எனும் திறமை இருந்தால் வேலைக்கு அமர்ந்துகின்றன. இல்லையென்றால் கழற்றிவிடுகின்றனர்.
அடுத்து 'ரோபாட்டிக்ஸ்', 'ஆட்டோமேஷன்' தொழில் உலகினை ஆள போகின்றன. எனவே அதற்கேற்ப எதிர்கால படிப்புகளை எடுத்து படிக்க வேண்டிய முக்கியம். எடுத்த உடனே சிலருக்கு ஆண்டிற்கு ரூ.8 லட்சத்தில் வேலை கிடைக்கிறது. சிலருக்கோ 15 ஆண்டுகள் கடந்து தான் அந்த சம்பளத்தை தொடுகின்றனர். இதற்கு திறமை தான் காரணம்.
சிறந்த கல்லுாரியில் மாணவர்களை தேடிப் பிடித்து பெற்றோர் சேர்க்கலாம். ஆனால் மாணவர்களுக்கு விருப்பம் இல்லாமல் அழுத்தம் கொடுத்து சேர்த்தால் அந்த மாணவர்களால் சோபிக்க முடியாது. எனவே மாணவர்களின் விருப்பத்தை தெரிந்து கொண்டு உயர்கல்வியில் சேர்ந்து விடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
