/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மக்கள் பிரச்னைகளை முன்நின்று தீர்க்கும் தினமலர்
/
மக்கள் பிரச்னைகளை முன்நின்று தீர்க்கும் தினமலர்
ADDED : செப் 06, 2025 03:17 AM
புதுச்சேரி பதிப்பு, கடந்த 1991ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி அன்று ஆரம்பித்து தனக்கென தனிமகுடம் சூட்டிக்கொண்டு, புதுச்சேரி, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அறிவு ஒளிவீசி வருகிறது. அத்துடன் சமூக பொறுப்புணர்வு மிக்க நாளேடாக செவ்வன விளங்கி வருகின்றது. நிறைய நாளிதழ்கள் வெளிவந்து கொண்டிருந்தாலும், புதுச்சேரியில் மக்களின் நாடி துடிப்பினை பிரதிபலிக்கும் நெம்பர் -1 நாளிதழாக தினமலரே உள்ளது.
சமூக விழிப்புணர்வு தமிழகம் மட்டுமின்றி, புதுச்சேரி பகுதிகளை செய்திகளை முழுவதுமாக தருவதற்கென்றே நான்கு பக்கங்களுடன் தனி இணைப்பாக வாரத்தில் 6 நாட்கள் வெளியாகின்றது. புதுச்சேரியில் நிகழும் பல்வேறு அரசியல், சமுதாயம், கலை, பண்பாடு, சிறப்பு நிகழ்ச்சிகள், ஆன்மிகம், விளையாட்டு, இலக்கியம் என அனைத்து செய்திகளையும் தெளிவாக எடுத்துரைத்து வருகின்றது. இந்த செய்திகள் வாயிலாக சமூக விழிப்புணர்வை ஊட்டுவதுடன் சமூக பயன்பாட்டிற்கும் தினமலர் அளப்பரிய பங்காற்றி வருகின்றது.
பிரச்னைகளுக்கு தீர்வு புதுச்சேரியில் மக்களின் பிரச்னைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதில் தினமலரே முன்னணியில் வகிக்கின்றது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கும், மக்களுக்கு இடையில் பாலமாக இருந்து பிரச்னைகளை உண்மையின் உரைக்கல்லாக முன்னிறுத்தி உறுதியாக எடுத்துரைப்பதில் நிகரில்லை. எனவே தினமலரில் குறுகிய காலம், நீண்ட கால பிரச்னைகள் என எது வெளியானாலும் அது அன்றைக்கு கவர்னர், முதல்வர் முதல் கடைகோடி அரசு துறை ஊழியர் வரை கவனம் பெறும். அத்துடன் அரசு துறைகள் பரப்பரப்பாகி விடும். தொடர்ந்து அந்த பிரச்னையும் உடனுக்குடன் சரி செய்யப்பட்டு விடும். தினமலர் செய்தி எதிரொலியால் விளைந்த நன்மைகளை அடுக்கி கொண்டே போகலாம். அந்த அளவிற்கு பொது பிரச்னைகளை தீர்ப்பதில் மக்களின் நன்மதிப்பினை பெற்றுள்ளது என்று சொன்னால் மிகையில்லை.
மேம்பாலம் குறுகிய பரப்பளவே உள்ள புதுச்சேரியில் 14 லட்சம் வாகனங்கள் ஓடுகின்றன. தினமும் போக்குவரத்து நெரிசலால் சிக்கி திணறி வருவதை தினமலர் அடிக்கடி சுட்டிக்காட்டியது. மேம்பாலம் கட்டினால் மட்டுமே தீர்வு என தொலைநோக்குடன் கூறியது. இதனையடுத்த இப்போது ,100 அடி ரோடு, அரும்பார்த்தபுரத்தில் இரண்டு மேம்பாலங்கள் தற்போது கட்டப்பட்டு, நெரிசல் குறைத்துள்ளது. தினமலர் முயற்சியால் அடுத்து இந்திரா சிக்னல் முதல் ராஜிவ் சிக்னல் வரை பிரமாண்ட பாலம் கட்டப்படும் என அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
ரயில்வே இதேபோல் புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு மட்டுமே ரயில்கள் ஓடிக்கொண்டு இருந்தது. இந்த ரயில் சேவையை தென் தமிழகம் மற்றும் வட மாநிலங்களுக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும் என தொடர்ந்து சுட்டி காட்டி வந்தது. இதன் காரணமாக தற்போது புதுச்சேரி மாநிலத்தில் இருந்து வட இந்தியாவிற்கு நேரடி ரயில் சேவை துவங்கப்பட்டு, தென்னக ரயில்வேயில் முக்கிய இடத்தினை பிடித்துள்ளது.
துறைமுகம் புதுச்சேரியில் 1994 முதல் 2006 வரை செயல்பட்டு வந்த சரக்கு துறைமுகம், அதன்பிறகு பல்வேறு காரணங்களால் செயல்படவில்லை. துறைமுகத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினமலர் தொடர்ந்து சுட்டி காட்டி அரசின் கவனத்திற்காக செய்தி வெளியிட்டது. அதன் விளைவாக விரைவில் புதுச்சேரி துறைமுகத்தினை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு முயற்சி எடுத்து வருகிறது. இதில் தினமலரின் பங்களிப்பு மிக அதிகம்
விமானம் சேவை புதுச்சேரி மாநிலத்தினைபொருத்தவரை லாஸ்பேட்டையில் மட்டுமே விமான நிலையம் உள்ளது. இங்கு முதல் விமான சேவை 7.1.2013 -இல் தொடங்கப்பட்டது. ஆனால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. புதுச்சேரியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஆண்டிற்கு வருகை தரும் சூழ்நிலையில் விமான ஓடுதளத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்; பிற நகரங்களுக்கு விமான சேவையை விரிவுப்படுத்த வேண்டும் என தொடர்ந்து தினமலரில் சுட்டிக்காட்டப்பட்டது. இதன் விளைவாக பெங்களூரு, ைஹதராபாத் நகரங்களுக்கு விமான சேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில் அடுத்து திருப்பதிக்கும் விமான சேவை விரிவாக்கம் செய்ய அரசு முயற்சித்து வருகிறது.
அரசு வேலைவாய்ப்பு மாநிலத்தில் படித்த இளைஞர்கள் லட்சக்கணக்கில் வேலையில்லாமல் உள்ளனர். ஆனால் அரசு துறைகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பணியிடங்கள் நிரப்பாமல் இருந்தது. இது குறித்து தொடர்ந்து தினமலரில் செய்தி வெளியான சூழ்நிலையில் இந்த 10 ஆயிரம் காலிபணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக 2 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்து அறிவித்துள்ளது.
தொழிற்பேட்டை புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் வெளியேறி விட்டன. இருக்கின்ற தொழிற்சாலைகளை தக்க வைக்கவும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்படியே போனால் புதுச்சேரியில் தொழில்கள் நலிந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை இழக்க நேரிடும் என்பதை 'தினமலர்' சுட்டிகாட்டியது. இதனையடுத்து மீண்டும் தொழிற்சாலைகளை ஈர்க்க புதுச்சேரி அரசு தொழில் கொள்கைகளை வகுத்து வருகின்றது. அத்துடன் பல்வேறு நாடுகளில் முதலீட்டாளர்களை புதுச்சேரியில் தொழில் துவங்க வேண்டும் என பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றது. இது புதுச்சேரி தினமலரின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி.
இதேபோல், புதுச்சேரிக்கு ஒருங்கிணைந்த நீதிமன்றம் கொண்டு வந்தது, மாநிலத்தின் காவலர்கள் எண்ணிக்கையை அதிகரித்தது, நேரு வீதியில் நெரிசல் இடத்தில் உள்ள சிறைச்சாலை வேறு இடத்திற்கு மாற்றியது, மாநிலத்தில் சென்டாக் மாணவர் சேர்க்கையை ஆன்-லைனில் கொண்டுவர முயன்றது, சாலை ஆக்கிரமிப்புகளை சுட்டி காட்டி அகற்றியது என தினமலரால் தினமும் விளைந்த நன்மைகளை அடுக்கடுக்காக பட்டியலிட்டுகொண்டே செல்லாம்.
புகார் பெட்டி புதுச்சேரி, தினமலர் இதழில் வெளியாகும் 'புகார்' பெட்டி, மக்களின் அடிப்படை பிரச்னைகளை தினமும் அரசுக்கு, ஓங்கி ஒலிக்கும் இடமாக உள்ளது. நாய் தொல்லை, கழிவு நீர்தேக்கம், சுகாதாரசீர்கேடு, தெரு விளக்கு எரியாமை, குண்டு குழியுமான சாலை என அன்றாடம் பொதுமக்கள் சந்திக்கும் பிரச்னைகள், அவதிப்படும் சீர்கேடுகளை அனைத்தும் இப்பகுதியில் படத்துடன் வெளியாகி அரசின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதனை காணும் அரசியலாளர்கள், அதிகாரிகளும் உடனடியாக பிரச்னைகளை களைந்து விடுகின்றனர். இதேபால் ஒருபோன் போதும் என்ற பகுதி மக்களிடம் உரையாடவும், மக்கள் தங்களது பிரச்னைகளை வெளிக்கொணரவும் முக்கியவத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது. இதன் வாயிலாகவும் தீர்க்கப்பட்ட பிரச்னைகள் ஏராளம்.
சுருக்கமாக சொல்வதென்றால், தினமலர் நாளிதழ் மக்களின் எம்.எல்.ஏ., போன்று செயல்பட்டு வருகின்றது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,தொகுதி பிரச்னைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு தீர்ப்பதைபோன்றே, தினமும் தினமலர் நாளிதழ் மக்களின் பிரச்னைகளை பட்டியலிட்டு தீர்க்க போராடுகிறது.
டி.வி.ஆர் வகுத்து தந்த சமுதாய நோக்க பாதையில் புதுச்சேரி தினமலர் நாளிதழ் பயணித்து, செய்திகளை தருவதோடு, அரசு இயந்திரம், அதிகாரிகள், பொதுமக்களுக்கு இணைப்பு பாலமாக இருந்து பிரச்னைகளை தீர்க்க உதவி வருகிறது.