/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் 2 இடங்களில் 'தினமலர்' வித்யாரம்பம்... கோலாகலம்: கல்வி கோவிலுக்குள் அடியெடுத்து வைத்த மழலைகள்
/
புதுச்சேரியில் 2 இடங்களில் 'தினமலர்' வித்யாரம்பம்... கோலாகலம்: கல்வி கோவிலுக்குள் அடியெடுத்து வைத்த மழலைகள்
புதுச்சேரியில் 2 இடங்களில் 'தினமலர்' வித்யாரம்பம்... கோலாகலம்: கல்வி கோவிலுக்குள் அடியெடுத்து வைத்த மழலைகள்
புதுச்சேரியில் 2 இடங்களில் 'தினமலர்' வித்யாரம்பம்... கோலாகலம்: கல்வி கோவிலுக்குள் அடியெடுத்து வைத்த மழலைகள்
ADDED : அக் 02, 2025 11:14 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் இரு இடங்களில் கோலாகலமாக நடந்த 'தினமலர்' வித்யாரம்பம் நிகழ்ச்சியில், ஆர்வமாக பங்கேற்ற பெற்றோர்கள் தங்களது இளந்தளிர்களை கல்வி கோவிலுக்கு அடியெடுத்து வைக்க செய்தனர். 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் நடத்தும் 'அ'னா...'ஆ'வன்னா.. அரிச்சுவடி ஆரம்பம் எனும் வித்யாரம்பம் நிகழ்ச்சி, புதுச்சேரியில் கோர்க்காடு, தி ஸ்காலர் சி.பி.எஸ்.இ., பள்ளி, லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி என, இரு இடங்களில் நேற்று கோலாகலமாக நடந்தது.
கோர்க்காடு தி ஸ்காலர் பள்ளியில் காலை 8:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, சரஸ்வதி வழிபாட்டுடன் கோலாகலமாக துவங்கிய வித்யாரம்பம் நிகழ்ச்சிக்கு புதுச்சேரி 'தினமலர்' நாளிதழ் வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., ஜிப்மர் இயக்குநர் வீர் சிங் நேகி, தி ஸ்காலர் பள்ளி சேர்மன் பழனிவேல், தாளாளர் சுரேஷ், நிர்வாக இயக்குநர் சரஸ்வதி ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியை சிறப்பு விருந்தினர்கள், செல்வகணபதி எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ., கலெக்டர் குலோத்துங்கன், முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடேசன், ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்திரன், சுகாதாரத் துறை இயக்குநர் செவ்வேள் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
ருசி பலுான் மொபைல் மூலம் முன் பதிவு செய்திருந்த பெற்றோர் தங்களது குட்டி குழந்தைகளுடன் காலை 7:00 மணி முதலே நிகழ்ச்சிக்கு அலை அலையாக வரத் துவங்கினர். வாசலிலேயே, குழந்தைகளுக்கு ருசி நிறுவனத்தின் பலுான்கள் கொடுத்து வரவேற்க, அவர்களின் உற்சாகத்திற்கும், கொண்டாட்டத்திற்கும் அளவே இல்லை.
பெற்றோர்களின் கையை பிடித்தப்படி பலுான்களுடன் அங்கும் இங்கும் நடந்து செல்ல, கல்விக்கான அடித்தளமே அழகாக இருந்தது. பின், பெற்றோர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு மழலைகள் வரிசையாக வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கப்பட்டனர்.
ஆரம்பித்த ஆளுமைகள் தொடர்ந்து கணபதி பூஜை, சரஸ்வதி பூஜையுடன் அமர்க்களமாக வித்யாரம்பம் நிகழ்ச்சி துவங்கியது. பெற்றோர்கள் தங்களது இஷ்டதெய்வம், குலதெய்வத்தை வணங்கியபடி நிற்க, மழலைகளை தங்களது மடிகளில் அமர வைத்த ஆளுமைகளில் சிறந்த சிறப்பு விருந்தினர்கள், அக்குழந்தைகளின் ஆட்காட்டி விரல் பிடித்து நெல் மணியில் ஓம் என்ற பிரணவத்தை எழுதினர். அடுத்து உயிரெழுத்தான 'அ' எழுதி மழலையின் கல்விக்கான அடித்தளத்தை துவக்கி வைத்து பிள்ளையார் சுழியிட்டனர்.
கல்வியிலும், வாழ்விலும் சிறந்து விளங்க வேண்டும் எனவும் குழந்தைகளை வாழ்த்தினர்.
அழகிய தருணம் தங்கள் வீட்டு செல்லக் குழந்தைகள் முதல் முதலாக அரிச்சுவடி எழுதியதை கண்ட பெற்றோர், தத்தா - பாட்டிக்கள், உறவினர்கள் பெருமிதம் கொண்டனர். அந்த அழகிய தருணத்தை 'மிஸ்' செய்யாமல் தங்களது மொபைல் போனில் படம் எடுத்து பொக்கிஷமாக பத்திரப்படுத்தினர்.
தெய்வீக பாடல்கள் குட்டீஸ்கள் என்றாலும் குழந்தைகளிடம் தனித்திறமைகளுக்கு பஞ்சமில்லை. பல குழந்தைகளுக்கு தெய்வீக பாடல்கள் அத்துபடியாக இருந்தது. விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் இருந்த மைக்கை பிடித்த குழந்தைகள், கந்த சஷ்டி கவசம், காயத்ரி மந்திரம் என, அடுக்கடுக்காக மனம் உருகி பாட கைதட்டல்களால் அரங்கமும் அதிர்ந்தது.
குட்டீஸ்களுக்கு 'கிப்ட்' நிகழ்ச்சியில் பங்கேற்ற 2.5 வயது முதல் 3.5 வயதுள்ள மழலைகளுக்கு கல்வியை கற்றுக்கொடுக்க புத்தகப்பை உள்ளிட்ட 'ஸ்கூல் கிட்' பரிசாக வழங்கப்பட்டது. மனசு நிறைந்த பரிசு பொருட்கள், பலுான்களுடன் குட்டீஸ்கள் அங்கும், இங்கும் ஓடி உலா வந்ததும், பெற்றோர் கரம் பிடித்து நடந்ததும் கொள்ளை அழகாக இருந்தது. பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காலை 10:00 மணியளவில் வித்யாரம்பம் நிகழ்ச்சியை முடித்த பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை, பள்ளியில் சேர்க்கவும் ஆர்வம் காட்டினர். பல்வேறு பள்ளிகளுக்கு சென்று சேர்க்கை தொடர்பான விபரங்களை கேட்டறிந்தனர். அத்துடன் பள்ளிகளிலும் குழந்தைகளை சேர்த்தனர். சரஸ்வதியின் அருளாசியுடன் கல்வி கோவிலுக்குள் அடியெடுத்து வைத்தனர்.
பெற்றோர் பாராட்டு கல்விச்சாலைக்குள் அடியெடுத்து வைக்கவுள்ள தங்களது குட்டி குழந்தைகளுக்கு சரஸ்வதி தேவியின் அருள் கடாச்சம் முழுமையாக கிடைக்கும் வகையில் வித்யாரம்பம் நிகழ்ச்சி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததாக பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.