/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோவில் கட்டுவதில் தகராறு: போலீசார் குவிப்பு
/
கோவில் கட்டுவதில் தகராறு: போலீசார் குவிப்பு
ADDED : பிப் 06, 2025 07:07 AM

திருக்கனுார்; விநாயகம்பட்டில் புதிதாக கோவில் கட்டுவதில், இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதால், போலீசார் குவிக்கப்பட்டனர்.
திருக்கனுார் விநாயகம்பட்டில், சாலையின் நடுவே அமைந்துள்ள மாரியம்மன் கோவிலால், இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டு வருகிறது.
மாற்று இடத்தில் கோவில் கட்டுவதற்கு இடம் ஒதுக்கி தரும்படி, ஒரு தரப்பினர் அரசுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும், நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சிறுவர் விளையாட்டு பூங்கா வளாகத்தில், புதிதாக கோவில் கட்டும் பணியினை, ஒரு தரப்பினர் கடந்த சில தினங்களுக்கு முன் துவங்கினர். இதற்கு, மற்றொரு தரப்பினர், எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. திருக்கனுார் போலீசார், இருதரப்பை சேர்ந்த 40 பேர் மீது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழக்கு பதிவு செய்து, வில்லியனுார் சப் கலெக்டர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அதில், உடன்பாடு ஏற்படாத நிலையில், கோவில் கட்டும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
இதனால், இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவுவதால், அப்பகுதியில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனிடையே பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுந்தர்ராஜ், விநாயகம்பட்டில் பொதுப் பணித்துறைக்கு சொந்தமான இடத்தில், அனுமதியின்றி ஒரு தரப்பினர் கோவில் கட்டி வருவதாக போலீசில் புகார் அளித்தார். திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.