பருவ மழைக்கால வழிகாட்டுதல்கள்: மாவட்ட நிர்வாகம் வெளியீடு
பருவ மழைக்கால வழிகாட்டுதல்கள்: மாவட்ட நிர்வாகம் வெளியீடு
UPDATED : அக் 15, 2026 08:44 PM
ADDED : அக் 15, 2026 07:49 PM

புதுச்சேரி: பருவ மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டுதல்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
கலெக்டர் குலோதுங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
2026ம் ஆண்டிற்கான பருவமழை துவங்கியுள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி மாவட்டத்தில், கனமழை, வெள்ளம், புயல், பலத்த காற்று, இடி மின்னல் மற்றும் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்தல் போன்ற இயற்கை பேரிடர்களால், ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க பொதுமக்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதன்படி, இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் வெளியிடும் வானிலை எச்சரிக்கைகள் மற்றும் பாதுகாப்பு அறிவுரைகளை கவனிக்க வேண்டும். கனமழை, புயல் மற்றும் இடி மின்னல் நேரங்களில், தேவையற்ற பயணங்களை தவிர்த்து பாதுகாப்பான இடத்தில் இருக்க வேண்டும்.
தாழ்வான பகுதிகள், ஆற்றங்கரைகள் மற்றும் வெள்ள அபாயம் உள்ளவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் பாதுகாப்பான இடங்களில் செல்ல வேண்டும். ஆறுகள், ஏரிகள், வாய்க்கால்கள் மற்றும் நீர்நிலைகளில் இறங்குதல், குளித்தல், நீந்துதல், மீன்பிடித்தல் மற்றும் செல்பி எடுத்தல் போன்ற செயல்களில் ஈடுபட கூடாது.
வெள்ள நீர் தேங்கிய சாலைகளை கடக்கவோ, வானங்கள் இயக்கவோ கூடாது. மழை நீர் வடிகால்கள் மற்றும் வாய்க்கால்களில் குப்பைகள், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை கொட்டக் கூடாது. பலத்த காற்று மற்றும் இடி மின்னலின்போது மரங்கள், மின்கம்பங்கள், பழுதடைந்த கட்டடங்கள் மற்றும் விளம்பர பதாகைகளின் அருகில் நிற்க கூடாது.
அறுந்து விழுந்த மின்கம்பிகளின் அருகில் செல்ல கூடாது. வீடுகளில் குடிநீர், உணவுப் பொருட்கள், அத்தியாவசிய மருந்துகள், மின் விளக்கு மற்றும் முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கால்நடைகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மீனவர்கள் கடலுக்கு செல்வது தொடர்பாக மீன்வளத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் வழங்கும் எச்சரிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். சமூக ஊடகங்களில் பரவும் உறுதிபடுத்தாத தகவல்கள் மற்றும் வதந்திகளை நம்பவோ, பகிரவோ வேண்டாம். பேரிடர் மேலாண்மை தொடர்பான தகவல்கள், பாதுகாப்பு வழிமுறைகள், மற்றும் சந்தேகங்களை https:psdma.py.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். அவரச உதவி மற்றும் புகார்களுக்கு 1077,1070,112 ஆகியே எண்களிலும், 9488981070 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
