/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தீபாவளி பட்டாசு மாசு கடந்தாண்டை விட... 45 சதவீதம் குறைவு; மாசுக்கட்டுபாட்டு குழுமம் ஆய்வு வெளியீடு
/
தீபாவளி பட்டாசு மாசு கடந்தாண்டை விட... 45 சதவீதம் குறைவு; மாசுக்கட்டுபாட்டு குழுமம் ஆய்வு வெளியீடு
தீபாவளி பட்டாசு மாசு கடந்தாண்டை விட... 45 சதவீதம் குறைவு; மாசுக்கட்டுபாட்டு குழுமம் ஆய்வு வெளியீடு
தீபாவளி பட்டாசு மாசு கடந்தாண்டை விட... 45 சதவீதம் குறைவு; மாசுக்கட்டுபாட்டு குழுமம் ஆய்வு வெளியீடு
ADDED : அக் 22, 2025 08:02 AM

புதுச்சேரி: தீபாவளி பண்டிகை மாசு, கடந்தாண்டை ஒப்பிடும்போது 45 சதவீதம் குறைந்ததுள்ளது மாசுக்கட்டுப்பாட்டு குழும ஆய்வில் தெரிய வந்துள்ளது. தீபாவளி பண்டிகையின்போது உருவாகும் காற்று மற்றும் ஒலி மாசுவை அளவீடு செய்ய சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு வாரியம் சாதாரண நாட்களிலும் தீபாவளி தினத்தன்றும் காற்று மாசு மற்றும் ஒலி அளவை கண்காணித்து பதிவு செய்கிறது. புதுச்சேரியில் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை பட்டாசு வெடித்து கோலாகலமாக கொண்டாடப்பட்ட சூழ்நிலையில், மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் பதிவு செய்த காற்று மாசுபாடு ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
மிதவை துகள்-10 காற்று மாசுப்பாட்டில் 10 மைக்ரான் அளவிலான துாசி துகள்கள் முக்கிய காரணியாக ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இவை மூக்கின் வழியே உடலுக்குள் செல்வதால், மூச்சு திணறல், நுரையீரல் பாதிப்பு ஏற்படும்.
புதுச்சேரியில் சாதாரண நாட்களில் இந்த மிதவை மாசு துகள்கள் 44 மைக்ரான் அளவில் இருந்தது. ஆனால், தீபாவளியன்று இந்த மதிப்பு 3 மடங்கு உயர்ந்து 133 மைக்ரான் அளவு பதிவாகி இருந்தது. கடந்தாண்டு தீபாவளி மாசினை ஒப்பிடும்போது மிதவை துகள்கள் 'மிகவும் மாசு' என்ற நிலையில் இருந்து 'மிதமான மாசு' என்ற நிலையை அடைந்திருந்தது.
மிதவை துகள்-2.5 இதேபோல் காற்று மாசு அளவீட்டில் மிதவை துகள்-2.5 மிக முக்கிய அளவுகோலாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன. மிகச் சிறிய துாசி துகளான இவை, நேரடியாக நுழையீரலுக்குள் சென்று ரத்தத்தில் கலக்க வாய்ப்புள்ளது. சுவாச நோய்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம். கடந்த 2024ம் ஆண்டு மிகவும் மாசு என்ற நிலையில் இருந்த இந்த மிகச்சிறிய மிதவை துகள்கள், இந்த தீபாவளியன்று மிதமான மாசு என்ற நிலையை எட்டி ஆறுதலை அளித்தது.
காற்று தர குறியீடு காற்று எந்தளவிற்கு சுத்தமாக அல்லது மாசு அடைந்துள்ளது என்பதை ஒட்டுமொத்தமாக 0 முதல் 500 வரை மதிப்பெண் கொடுத்து ஏர் குவாலிட்டி இன்டக்ஸ் எனும் காற்று தர குறியீடு அளவிடப்படுகிறது. புதுச்சேரியில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அன்று காற்றின் மாசு 367 அளவு பதிவாகி இருந்தது. அதுவே இந்தாண்டு 300 அளவாக குறைந்துள்ளது. இந்த காற்று தர குறியீட்டிலும் மிகவும் மாசு என்ற நிலையில் இருந்து புதுச்சேரி மிதமான மாசு என்ற நிலையை எட்டி சற்றே ஆறுதலை அளித்துள்ளது.
உச்ச நேரம் மாசுக்கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் ரமேஷ் கூறுகையில், 'சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தி இருந்த 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசுகள் அதிக அளவில் வெடிக்கப்பட்டதால் அந்த நேரத்தில் மட்டும் 1033 மைக்ரான் அளவுக்கு காற்றின் மாசு அதிகரித்திருந்தது. இந்த நேரத்தில் தான் புதுச்சேரியில் உச்ச மாசு ஏற்பட்டது. கடந்தாண்டு தீபாவளி பண்டிகையை ஒப்பிடும்போது 45 சதவீதம் காற்று மாசு குறைந்து இருந்தது. இதன் மூலம் சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்திய நேரத்தில் பட்டாசு வெடிக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது' என்றார்.
காதை கிழித்த சத்தம் ஒலி மாசுப்பாட்டினை பொருத்தவரையில் சாதாரண நாட்களை காட்டிலும் தீபாவளி அன்று சற்று அதிகரித்து பதிவாகி உள்ளது என, புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழும ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த காற்று, ஒலி மாசு ஆய்வு முடிவுகள் அனைத்துமே, புதுச்சேரியின் காற்றை 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கும் மையத்தின் மூலம் கண்டறிந்து வெளியிடப்பட்டுள்ளது.